கோவில்பட்டி ஜோதி நகரில் சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டம்
கோவில்பட்டி ஜோதி நகரில் வாறுகாலை சுத்தப்படுத்த வேண்டும், சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ஜோதி நகர் கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள சாலை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே நடக்க பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, இச்சாலையின் நடுவே மின்கம்பம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரும் ஒரே நேரத்தில் செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சாலையின் ஓரமுள்ள கழிவுநீர் ஓடை தூர்வாரப்படாமல் கழிவுநீர் சாலைகளில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாமல், ஜோதி நகர் பிரதான சாலை வழியாகவேசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலதாமதம் மற்றும் பணவிரயமும் ஏற்படுகிறது.இதையடுத்து, சிதிலமடைந்த இச்சாலையை சீரமைக்க வேண்டும், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும், கழிவுநீர் ஓடையை முறையாக தூர்வாரி தங்குதடையின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் தலைமையில், அச்சாலையைப் பயன்படுத்த முடியாததை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டும் வகையில் நாற்றுகளை நட்டி ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், நகரச் செயலர் சரோஜா, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ் உள்பட அப்பகுதி பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி ; சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை