திருவண்ணாமலை காந்தி நகரில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு நாள்நடைபெற்றது
திருவண்ணாமலை காந்தி நகரில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 2127 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2 கோடியே 12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 2127 செல்போன்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கினார்.
திருவண்ணாமலை காந்தி நகரில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 819 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையப் பணியாளர்களுக்கு செல்போன்களை அமைச்சர் வழங்கினார். அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளையும், குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்படும் தகவல், குழந்தைகளுக்கு எடை எடுத்தல், கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்கப்படுவது குறித்தும் மற்றும் வளரிளம் பெண்களுக்கு சத்தான உணவுப்பொருட்கள் வழங்குவது, வீடுகள் பார்வையிடுதல், சமூகம் சார்ந்த நிகழ்வுகள், குறித்துமான பல்வேறு தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்காக அங்கன்வாடி மைய பணியாளர் களுக்கு இந்த செல்போன்கள் வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் 2127 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தை நல மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் போஷான் அபியான் திட்டமானது பாரத பிரதமரால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2127 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2 கோடியே 12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 2127 செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு ஏழை எளிய குழந்தைகளுக்கு தாயாகவும், கர்ப்பிணிகளுக்கு நல்ல தோழியாகவும் இருந்து ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து அவர்களை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே அங்கன்வாடி பணியாளர்களின் பணியாகும். அந்தவகையில் நீங்கள் நடைமுறைப்படுத்தும் அனைத்துப்பணிகளையும் ஆன்லைனில் பதிவேற்றும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் கீழ் செல்போன்கள் வழங்கப்படுகிறது. இதை எவ்வாறு இயக்குவது, எந்த செயலியில் அங்கன்வாடி மைய பணிகளை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் விரிவாக எடுத்துரைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறைகளின் வல்லுனர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நகராட்சி ஆணையாளர் சுரேந்திரன், தலைமை உரை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னுரை, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் குமார், நகர செயலாளர் செல்வம் மற்றும் குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை