• சற்று முன்

    திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக பெருவிழா! பாதயாத்திரையாக சென்று பக்தர்கள் வழிபாடு!!


    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாகத்திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று, நேர்க்கடன் செலுத்தி, முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படையாக விளங்குவது, திருச்செந்தூர் ஆகும். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த 9ம் தேதி துவங்கியது.

    இதையொட்டி, தினமும் பகலில் மூலவருக்கு தீபாராதனை; சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்தமண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்று வந்தது. சுவாமி அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து தங்கதேரில் எழுந்தருளி, அதன் பிறகு கோயிலை சென்றடைந்தார்.

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு மூலவருக்கும், சண்முகருக்கும் உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

    அதேபோல், 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. விசாக திருவிழாவன்று சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேருகிறார். அங்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவில் சுவாமி வசந்த மண்டபம் சென்று காட்சியருளி முனிகுமாரருக்கு சாப விமோசனமளித்து கோயிலை சேருகிறார்   இவ்விழாவை முன்னிட்டு, பல ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல், பழநி, திருப்பரங்குன்றம், மருதமலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பிற முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad