Header Ads

  • சற்று முன்

    செய்யாறு அருகேகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்போக்குவரத்து பாதிப்பு


    செய்யாறு அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செய்யாறு, 
    செய்யாறை அடுத்து தண்டரை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் செய்யாறு- ஆரணி சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஒரு குடம் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. அருகில் உள்ள விவசாய கிணறுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெண்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் அலட்சியமாக பதிலளிக்கிறார்” என்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதனை ஏற்காத அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து எங்கள் பகுதியில் இனிவரும் காலங்களில் முறையாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாரிக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இன்னும் 2 நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பேரில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad