Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் மனு கொடுத்துள்ளார்.


    திருவண்ணாமலை: பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிறது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அன்றைய தினம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னிந்தியாவின் புகழ்மிக்க சிவாலயமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம், பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி அமைந்திருக்கிறது. இதனால் திருவண்ணாமலை தொகுதியிலும் தேர்தலை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான சங்கர் கலெக்டர் கந்தசாமியிடம் திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலை மாற்று தேதியில் நடத்த கோரி மனு கொடுத்துள்ளார்.

    ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் அன்று இரவு சித்ரா பவுர்ணமி வருவதால் அன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதனால் பொதுமக்கள் வாக்களிப்பதில் தவறும் நிலை உருவாகும். மேலும் ஓட்டுபெட்டியை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் திருவண்ணாமலை தொகுதி தேர்தலை மாற்று தேதியில் நடத்த ஆவன செய்ய வேண்டும். இந்து மக்களின் தருமத்திற்கும், எண்ணங்களுக்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மாற்று தேதியை ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம், ஏப்ரல் 18-ந் தேதி இரவு 7.05 மணிக்கு தொடங்கி, 19-ந்தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவடைகிறது. அதன்படி, 18-ந் தேதி இரவு, சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள். வாக்குப்பதிவு நடைபெறும் 18-ந் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், அன்றைய தினம் திருவண்ணாமலை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கும் என தெரிகிறது. கார்த்திகை தீபத் திரு விழாவுக்கு இணையாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள்.
    சென்னை, வேலூர், சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட தொலைதூர நகரங்களில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்கள், தங்களுடைய வாக்குகளை செலுத்திவிட்டு வருவதில் சிக்கல் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், திருவண்ணாமலை தொகுதியிலும் சித்ரா பவுர்ணமியன்று வாக்குப்பதிவு வெகுவாக பாதிக்கலாம். அதோடு, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், 20 லட்சம் பக்தர்கள் வருகை தரும் சித்ரா பவுர்ணமி விழாவுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.

    அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவற்றில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு தொகுதிகளில் உள்ள 3,475 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு வந்து, திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவல நெரிசலை கடந்து வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். எனவே, திருவண்ணாமலை தொகுதியில் தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து, தேர்தல் ஆணையம் தனி கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து சட்டரீதியான பரிசீலனை செய்து முன் கூட்டியே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

     செய்தியாளர் திருவண்ணாமலை   மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad