Header Ads

  • சற்று முன்

    இலங்கை வரலாற்றிலேயே அதிகளவு போதைப்பொருள் சிக்கியது


    இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரே தடவையில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

    கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போதே, இந்த ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வேன்களிலிருந்து இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு பெரிய பயண பொதிகளுக்குள், 272 பொதிகளாக பொதியிடப்பட்ட நிலையில், இந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    294 கிலோகிராமிற்கும் அதிக எடையுடைய, 2945 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படை இணைந்தே இந்த சுற்றி வளைப்பை முன்னெடுத்திருந்தனர். சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் கொழும்பு - கோட்டை நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்பட்டு, தடுத்து வைத்து விசாரணை நடாத்துவதற்கான உத்தரவை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த ஹெரோயின் போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட விதம் மற்றும் அதன் பின்னணி குறித்தும் தற்போது விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

    கொழும்பில் பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றிய, பொலிஸாருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையானது, எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றிய உன்னத பணி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

    இவ்வாறான செயற்பாடுகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இதேவேளை, கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி 95.88 கிலோகிராம் எடையுடைய 1100 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும், இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad