Header Ads

 • சற்று முன்

  பாமக-அதிமுக கூட்டணி: மைத்துனர் விமர்சனத்தால் மனம் நொந்த அன்புமணி


  தங்களுடைய கோரிக்கைகளை ஏற்பதாகச் சொன்னதால்தான் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

  திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனச் சொல்லிவந்த பாட்டாளி மக்கள் கட்சி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

  முதலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கமளித்தார். "தொண்டர்களில் துவங்கி, நிர்வாகிகள் வரை அனைவரையும் கலந்துபேசி எடுத்த முடிவு. இந்த முடிவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.கவுடன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் பிரச்சனைகள் - உரிமைகள் தொடர்பாக 10 அம்சக் கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்து, அதனை செயல்படுத்த வேண்டுமெனச் சொன்னோம்.

  அதில் முக்கியமாக காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தவேண்டும், விவசாயிகளுக்கு வங்கிக் கடன் மற்றும் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து வலியுறுத்த வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பா.ஜ.கவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள 20க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும்; அதற்குப் பதிலாக எம்-சாண்டை பயன்படுத்த வேண்டும். மதுவிலக்கை அறிமுகப்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்- குறைந்தது அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும் ஆகியவைதான் இந்தக் கோரிக்கைகள். இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் கூட்டணியில் இணைந்தோம். செயல்படுத்துவோம்.

  2011ல் இந்த இரு திராவிடக் கட்சிகளுடன் செல்ல மாட்டோம் என்று சொன்னது உண்மைதான். அப்போது கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இருந்தார்கள். ஆனால், அதைவிட முக்கியம் தமிழக உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதை முக்கியமாக பார்த்தேன். இந்த முடிவெடுத்து 8 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், அதற்கு ஏதாவது சிறு அங்கீகாரமாவது கிடைத்ததா?

  கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிட்டோம். 6 விழுக்காடு கிடைத்தது. அதற்கு ஏதாவது அங்கீகாரம் கிடைத்ததா? தொலைக்காட்சிகள் அதை விவாதிக்கவில்லை. தவிர, தமிழ்நாட்டு மக்களும் எங்களை அங்கீகரிக்கவில்லை. அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தனியாக எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. அதனால்தான் இந்தத் தேர்தலில் எங்கள் வியூகத்தை மாற்றியிருக்கிறோம். இது தமிழக மக்களுக்காக எடுத்த முடிவு".

  இதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். மதுவிலக்கை அமல்படுத்துவதாகச் சொன்ன அ.தி.மு.க. அதைச் செய்யாத நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன் எனக் கேட்டபோது, "இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இப்போது கூட்டணி வைத்திருக்கிறோம். அவர்களை வலியுறுத்தி மதுவிலக்கைக் கொண்டுவருவோம். அது ஜெயலலிதாவின் வாக்குறுதி. அ.தி.மு.க. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்." என்றார்.

  அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்ற முழக்கத்தை முன்வைப்பீர்களா என்று கேட்டபோது, இந்தத் தேர்தலுக்கான வியூகத்தை இப்போது வகுத்திருக்கிறோம். அடுத்த தேர்தல் குறித்து இப்போது சொல்ல முடியாது என்று கூறினார். மேலும், இந்திய அளவில் கடுமையான எதிர்ப்பு நிலையில் இருந்த கட்சிகள், கூட்டணி அமைத்ததைச் சுட்டிக்காட்டினார். விமர்சனம் செய்தால் கூட்டணி சேரக்கூடாது என ஏதாவது இருக்கிறதா எனக் கேள்வியெழுப்பினார் அன்புமணி. விமர்சனங்கள் வைத்தது மட்டுமல்லாமல், ஊழல் புகார்களையும் சுமத்தினீர்கள். அப்படியிருக்கும் நிலையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்களை நீக்கக்கோருவீர்களா என்ற கேள்விக்கு, "ஊழல் புகார் சுமத்தியது உண்மைதான். அதனை ஆளுநர் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

  இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்த நிலையில், சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரிப்பது ஏன் என்ற கேள்விக்கு, நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை அவ்வளவுதான் என்றார். இந்தக் கூட்டணி சேர்வதால் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை முடிவில் எள்ளளவும் மாற மாட்டோம். பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்தார்.

  அதிமுக - பாமக கூட்டணியும், நம்பிக்கையிழந்த எட்டு வழிச்சாலை விவசாயிகளும்
  ‘மோடியா லேடியா’ - ஜெயலலிதா; ‘தமிழக அரசு ஓர் ஊழல் அரசு’ - அமித் ஷா - மலர்ந்த கூட்டணி
  திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதென்பது பெற்ற தாயுடன் உறவு வைப்பதற்குச் சமம் என்று சொன்னதோடு கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துவிட்டு, இவ்வளவு விளக்கங்களை அளிக்கும்போது நெருடலாக இல்லையா என்ற கேள்விக்கு, "நிச்சயமாக இல்லை. மக்கள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்த அன்புமணி, கேள்வி கேட்ட நிருபரைப் பார்த்து, உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் எனக்குப் பிரச்சனை இல்லை என்றார்.

  அமைச்சர்கள் மீது குற்றம்சுமத்தி, ஆளுனரிடம் புகார் அளித்திருக்கிறீர்களே என்ற கேள்விக்கு, நாங்கள் அளித்த புகாரில் உண்மையிருந்தால் ஆளுனர் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். இது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது என்றார். அ.தி.மு.க. அரசில் ஊழல் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாக அவர் பதிலளிக்கவில்லை.தேர்தல் வரும்வரை கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்துகொள்கிறீர்கள், அது சரியா என்ற கேள்விக்கு "நான் இதற்கு 20 நிமிடம் விளக்கமளித்துவிட்டேன்" என்று மட்டும் தெரிவித்தார்.

  தி.மு.கவுடன் கூட்டணி தொடர்பாகப் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "தேர்தல் கூட்டணி தொடர்பாக எல்லா முக்கியக் கட்சிகளும் எங்களுடன் பேசினார்கள். தி.மு.க. உட்பட. இது இயல்பு. ஆனால், எங்கள் கட்சியினர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பினர். நாங்கள் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கவில்லையென்பதால் மு.க. ஸ்டாலின் எங்களைக் கடுமையாக விமர்சிக்கலாம். தோல்வி பயத்தாலும் விமர்சிக்கலாம். ஆனால், நாங்கள் பதிலுக்கு விமர்சிக்க மாட்டோம்." என்றார்.

  "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற முழக்கத்தின் நிலை என்று கேட்டபோது, அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்றார்கள். அப்படிச் சொன்னவர்கள் சுடுகாடு சென்றுவிட்டார்களா என்று கேள்வியெழுப்பினார். எங்களுடைய கொள்கைகளைப் பாராட்டியவர்கள், தேர்தல் அறிக்கைகளைப் பாராட்டியவர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே இந்தத் தேர்தலில் எங்கள் வியூகத்தை மாற்றியிருக்கிறோம். அடுத்த தேர்தலில் வேறு வியூகம் இருக்கலாம் என்றார்.நீட் தேர்வை நீக்க முடியாது என்று தெரிந்து அதை ஒரு கோரிக்கையாக வைத்திருப்பதாகக் கூறி அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பது நியாயமா என்று கேட்டபோது, நீட் தொடர்பான சட்டம் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அன்புமணி, அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, தமிழகத்திற்கு விலக்குப் பெற முடியுமெனக் கூறினார்.

  தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகக் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றவர் நீங்கள்தான்; தர்மபுரி மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, தர்மபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறேன்; தமிழகத்தில் வேறு ரயில் திட்டம் எதுவுமே வரவில்லை என்றும் தர்மபுரியின் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வாக, நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களுக்குப் போராடி சில திட்டங்களை அறிவிக்கச் செய்திருப்பதாகச் சொன்னார். கட்சி தனக்கு வாய்ப்பளித்தால் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதாகவும் அவர் சொன்னார்.

  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் அரசா என்ற கேள்விக்கு, "அடிப்படை முகாந்திரம் இருந்தால் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம்" என்று தெரிவித்தார்.

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad