Header Ads

  • சற்று முன்

    திமுக கிராம சபை கூட்டம் எதிர் கட்சியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது மு.க.ஸ்டாலின் பேச்சு


    திமுக கிராம சபை கூட்டங்களை பார்த்து எதிர்கட்சியினர் ஆத்திரமடைந்துள்ளனர் என விளாத்திகுளத்தில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் உள்ள 12500க்கு மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை அறிந்து கொள்ள, கடந்த ஜனவரி முதல் வாரம் முதல் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது 95 சதவீதம் வரை கிராம சபை கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டங்களை கூட்டி அதை முழுமையாக நடத்தி காட்டிய கட்சி திமுக தான். 

    இந்த கூட்டங்களை வெற்றிகரமாக நடப்பதை பார்த்து, மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு ஆத்திரம் வந்திருக்கிறது. அதுவும் மத்திய ஆட்சியில் இடம்பெற்றிருக்கக்கூடிய தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு திமுகவின் கிராம சபை கூட்டங்களை பார்த்து ஆத்திரமடைந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை பற்றி நமக்கு கவலையில்லை. நமது பணி கட்சி மற்றும் பொதுமக்களுக்கு நாம் ஆற்றிக்கூடிய பணியாகும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொண்டு நமது கடமையை நிறைவேற்றி வந்து கொண்டிருக்கிறோம். அதற்காக “மக்களிடம் செல்வோம். மக்களிடம் சொல்வோம். மக்களுடைய மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்தை கிராம சபை கூட்டத்தை தொடங்க போது  தேர்ந்தெடுத்து வெளிப்படுத்தி பயணத்தை தொடர்கிறோம். 

    தேர்தல் மட்டும் உங்களை பயன்படுத்தி விட்டு அப்படியே விட்டுவிட முடியாது. இந்த நிலையில் உங்களை நல்ல வகையில் பயன்படுத்த வேண்டுமென்றால், உங்களுக்கு ஊக்கத்தை, உற்சாகத்தை  வழங்கி கொண்டிருக்க வேண்டும். நான் செயல் தலைவராக பதவியேற்ற போது ஊராட்சி செயலாளர்களை அழைத்து  ஆய்வு கூட்டங்கள் நடத்தினோம். இது திமுக வரலாற்றிலே கிடையாது. ஆனால், நான் செய்தேன். ஊராட்சி செயலாளர்கள் தான் இந்த கட்சியை கட்டி காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்ணுக்கு தெரியமாட்டார்கள். அதனால் அவர்களை அழைத்து ஊக்கப்படுத்தினேன். தேர்தல் முடிந்தபின்னரும் உங்களை புறக்கணிக்காமல் உங்களுக்குரிய மதிப்பு, மரியாதை தொடர்ந்து வழங்கப்படும் என ஆய்வு கூட்டத்தில் எடுத்து கூறினேன்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில், மத்தியில் நாம் விரும்புகின்ற, சுட்டிக்காட்டக்கூடிய ராகுல் காந்தி பிரதமர் என ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது. இந்த 21 தொகுதிகளில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றால், இப்போது உள்ள ஆட்சி நீடித்த நிலைக்க வாய்ப்பே கிடையாது. 

    தற்போது தமிழகத்தில் அதிமுக மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டியான சூழ்நிலையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். நியாயமாக இந்த ஆட்சியை கலைத்திருக்க வேண்டும். ஆனால், கவர்கனர் அந்த பணியில் ஈடுபட மறுக்கிறார். இதற்கு மத்திய அரசு உடந்தையாக இருக்கிறது. எவ்வளவு தான் ஊழல்கள் நடந்தாலும், கமிஷன் வாங்கினாலும், நீதிமன்ற மூலம் பல தீர்ப்புகள் வந்தாலும், சிபிஐ சோதனை, வருமான வரித்துறை சோதனை, அமைச்சர்கள் வீட்டில் சோதனை, தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் அலுவலகத்தில் சோதனை என ஆட்சி நீடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மத்தியில் இருக்கக்கூடிய மோடி. பிரதமர் மோடி பினாமி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார்.

    மோடி ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகள் எதுவும் காப்பாற்றப்படவில்லை. தற்போது தேர்தல் வந்துவிட்டதால், விவசாயிகளை பற்றி கவலைப்படுவது போல் நாடகத்தை நடத்தி, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். 

    தமிழக விவசாயிகள் டெல்லியில் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், பிரதமர் அவர்களை அழைத்து பேசவில்லை. கஜா புயலால் டெல்டா பகுதிகள் பாதிக்கப்பட்ட போது, பிரதமர் மோடி ஒரு அனுதாப செய்தி கூட சொல்லவில்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என மக்களை வாட்டி விட்டு, நம்ம பணத்தை எடுத்துகொண்டு நமக்கே ரூ.6 ஆயிரம் அறிவிக்கிறார் என்றால், தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்கிற நிலையில் தான் இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தான் தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிற எடப்பாடி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இவை  தேர்தலுக்காக நடத்தப்படக்கூடிய நாடகம்.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என மக்கள் போராடினார்கள். அவர்களை அழைத்து பேசவில்லை. 100-வது நாள் ஊர்வலமாக சென்ற அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். 13 பேர் பலியாகினர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் திமுக மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வந்து பேசி உள்ளேன். ஸ்டெர்லைட் நிர்வாகம் அண்மையில் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள். மேல் முறையீட்டில் திறந்து விட்டால் என்ன ஆவாது என்று, சட்டமன்றத்தில் பலமுறை பேசும்போது நான் கூறினேன், உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்த கூட்டத்தில் கொள்கை ரீதியாக அதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் அதனை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். கொள்கை முடிவு எடுத்துவிட்டால், அதை திறப்பதற்கு அனுமதி கிடையாது. 

    உச்சநீதிமன்றம் தலையிட்டாலும் திறக்க முடியாது. இதுவரை அவர்கள் செவிசாய்க்கவில்லை. இந்த பிரச்சாரங்களை மக்களிடையே எடுத்துச்சொல்லி, வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலமாக மத்தியில் இருக்கக்கூடிய பாசிச பாரதிய ஜனதா மோடி தலைமையிலான ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதே போல், மண்டியிட்டு இன்றைக்கு ஒரு அடிமையாக நம்முடைய மாநில உரிமைகளை எல்லாம் பறிக்கொடுத்திருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார் அவர்.

    கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்பி, எம்.எல்.ஏக்கள் ஐ.பெரியசாமி, நேரு, கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமசந்திரன், தங்கம்தென்னரசு, கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad