Header Ads

  • சற்று முன்

    கமலஹாசன் மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொது வாழ்விலும் காணமல் போவார் - அமைச்சர் கடம்பூர் செ. ராஜு


    முன்னாள் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நேற்று  பிறந்த 8 குழந்தைகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு செய்தி துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.

    பின்னர், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  செட்டிகுறிச்சியில் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, ரூ.2 லட்சத்தில் கலையரங்கம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். திருமங்கலகுறிச்சியில் ரூ.9.5 லட்சத்தில் புதிய நியாய விலை கடையை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். இதே போல் ரூ.15 லட்சத்தில் காப்புலிங்கம்பட்டி கிராமத்தில் பாலம் மற்றும் சாலை சீரமைப்புக்காக அடிக்கல் நாட்டினார். ரூ.8.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட நியாய விலையை கடையை திறந்து வைத்தார்.



    நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராமச்சாலை திட்டத்தின்கீழ் கயத்தாறில் இருந்து கழுகுமலை செல்லும் சாலையில் அகிலாண்டம்மன் கோயில் அருகே ரூ.3.85 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

    இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.50.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவாலயம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 

    அடுத்த ஆண்டு நினைவு நாள் வருவதற்குள் இந்தியாவிலேயே எந்த தலைவருக்கு இல்லாத ஒரு நினைவாலயமாக உருவாக்கப்படும். அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை ரூ.20 கோடி செலவில் நினைவு இல்லமாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 

    கோவில்பட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ.15 கோடி தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்ட உடன், கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும். 

    ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் கமலுக்கு இல்லை. எதை சொன்னாலும் பொத்தாம் பொதுவாக படத்தில் வேண்டுமென்றால் வசனம் பேசலாம். எந்த மாண்பு குறைந்து விட்டது, யாருடைய மாண்பு குறைந்து விட்டது என்று அவர் சொன்னால் பதில் அளிக்கலாம். ஆனால், அவருக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வது வீணான வேலை. அவருக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டு முழித்துக்கொண்டிருக்கிறார். 

    மாண்பு போய் விட்டது என்று சொன்னால், ஒரே இடத்தில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு சந்திக்க தயார். அவர் தயாரா?. அவரது மாண்பு, மரியாதை, மானம் வேண்டுமானால் போகலாம்.  இன்று அரசியல் வந்த பின்னர் அதனை தக்க வைத்துக்கொள்ள அவருக்கு தெரியவில்லை. இதுவரை பேசிய எதையும் நிரூபிக்க தவறிய கமலஹாசன் மக்களால் நிராகரிக்கப்படுவார். அரசியலில் மட்டுமல்ல பொதுவாழ்வில் இருந்தும் அவர் காணாமல் போவார்.

    எங்கள் கூட்டணியை பற்றி திமுகவுக்கு என்ன கவலை. கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் சிக்கிய நேரத்தில், பழத்தை சாப்பிட்டவர் ஒருவர், அதனை பார்த்துக்கொண்டிருந்தவர் மீது வழக்கா என அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். காங்கிரஸ்காரர்களுக்கு அதில் தொடர்பு உண்டு என மறைமுகமாக சொன்னதோடு மட்டுமில்லாமல் அவர்களெல்லாம் வழக்கில் சேர்க்கப்படாமல் கனிமொழி, ராசாவை மட்டும்  சேர்த்ததற்காக கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் தெரிவித்தார். எங்கள் கூட்டணியை பார்த்து நாங்கள் கூறவில்லை. 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு வந்த உடனே நாங்கள் தெரியாமல் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை நாங்கள் அனுபவிக்கிறோம் என காங்கிரஸை சொன்னார். அந்த காங்கிரசுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். யார் முரண்பாடான கூட்டணி வைத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். 

    இது கொச்சைப்படுத்துகின்ற வார்த்தை. தேர்தல் வரும் நேரத்தில் கொள்கைகள் வேறாக இருக்கலாம். தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி வைப்பது காலம் காலமாய் நடந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவும், மூதரறிஞர் ராஜாஜியும் எதிர்மறை கொள்கைகள் கொண்டவர்கள். ஆனால், தேர்தல் கூட்டணியாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும். இங்கே திராவிட பராம்பரியம் வர வேண்டும் என்று அண்ணா கூட்டணி அமைத்தார். கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது அவர்களது விருப்பம். நாங்கள் அதனை விமர்சனம் செய்யவில்லை. அதே போல் இது எங்களுடைய விருப்பம். கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராகவும், மகளிரணி செயலாளராகவும் உள்ளார். ஆனால் தரமில்லாமல் விமர்சிக்கிறார். இது மக்களிடையே எடுபடாது. 

    கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் என்ன திட்டங்கள் வந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும். ஆனால், கீதாஜீவன் அமைச்சராக இருந்தபோது கூட தூத்துக்குடி 4-வது பைப் லைன் திட்டத்தை செய்யவில்லை. எங்களது ஆட்சியில்தான் ரூ.295 கோடியில் தூத்துக்குடிக்கு 4-வது பைப் லைன் திட்டம் கொண்டு வரப்பட்டு தினமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. என்னுடைய தொகுதியை பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். கீதாஜீவன் மேடைக்கு வந்தால் நான் விவாதிக்க கூட தயாராக இருக்கிறேன், என்றார் அவர்.

    செய்தியாளர் : சிவராமன் - கோவில்பட்டி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad