Header Ads

  • சற்று முன்

    மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த வேண்டும் - அதற்கு - எதிர் காட்சிகள் அனைவரும் இணைய வேண்டும் கொல்கத்தாவில் திமுக தலைவர் உரை

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கொல்கத்தாவில் நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்துவதுதான், இரண்டாவது சுதந்திர போர் என்றும், வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்து, பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்  அறைகூவல் விடுத்தார். 

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் பங்கேற்க செய்யும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனர். பாஜக அதிருப்தி தலைவர்கள் சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அரசியல், இலக்கியம், ஆன்மீகம் என அனைத்திலும் தமிழர்களும், வங்காளிகளும் சகோதர-சகோதரிகள் என்றும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில், தமிழகமும், வங்கமும் முக்கிய அங்கம் வகித்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மதவாத இந்தியாவை உருவாக்க பாஜக நினைப்பதாகவும், அதை வீழ்த்துவதே 2வது சுதந்திரப் போர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எதிரிகளே இல்லை என்று கூறி வந்த பிரதமர் மோடி, தற்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி செய்து கொண்டிருப்பதாகவும், ரஃபேல் போன்ற விவகாரங்கள் ஊழலில்லாமல் வேறு என்ன என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

    பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக அதிருப்தி தலைவரான சத்ருகன் சின்ஹா, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் இருந்ததாகவும், தற்போது அராஜகம் நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

    ஜனநாயகம் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அதை காக்கவே தாங்கள் பொதுக்கூட்டத்திற்கு வந்திருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

    பின்னர் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சர்வாதிகார போக்குடன் பாஜக இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்களை பொருட்கள் போல நினைத்து, குதிரை பேரத்தை கர்நாடகாவில் ஊக்குவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 

    தொடர்ந்து பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், எதிர்க்கட்சி கூட்டணி, பல பிரதமர் பதவி போட்டியாளர்களை வைத்திருப்பதாக, பாஜக கேலி செய்வதாக கூறினார். ஆனால், அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தாங்கள் சொல்வதாக கூறிய அவர், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளதாகவும், தாங்கள் இந்திய மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    பின்னர் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டில் பெண்கள், விவசாயிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் துன்பத்தில் இருப்பதாகவும், மோடியும், அமித் ஷாவும் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், நாட்டை அழித்து விடுவர்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

    அவரை தொடர்ந்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நாட்டை பாஜக துண்டாடிவிட்டதாகவும், தாங்கள் நாட்டை ஒருங்கிணைக்க நினைப்பதாகவும் கூறினார். பாஜக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய சரத் பவார், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை நம்பிக்கை தருவதாக தெரிவித்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்த மோடி ஆட்சிக்கு வந்ததும், ஒரு கோடியே 60 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, எதிர்க்கட்சித் தலைவர்களை சாத்தியமான எல்லா வழிகளிலும் குற்றவாளிகளாக மத்திய அரசு சித்தரிப்பதாக விமர்சித்தார். கூட்டத்தில் நிறைவுரை ஆற்றிய மம்தா பானர்ஜி, பொதுக்கூட்டத்தில் 24 கட்சிகள் வரை பங்கேற்றதாக தெரிவித்தார். சட்டம், அரசியலமைப்பு என அனைத்தையும் மாற்றும் மத்திய அரசை மாற்ற வேண்டியது அவசியம் என குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, வேலையே இல்லாதபோது, புதிதாக இடஒதுக்கீடு எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார்.

    தங்களது அணியின் ஒவ்வொருவரும் தலைவர்தான் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைக்கு பிரதமர் யார் என்பது குறித்து விவாதிக்க தேவையில்லை என்றும் தெரிவித்தார். மருந்து, மாத்திரைகள் காலாவதி ஆவதைப் போல, மோடி ஆட்சியும் காலாவதியாகிவிட்டதாக மம்தா பானர்ஜி விமர்சித்தார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad