• சற்று முன்

    "தாயிடமிருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதைத் தடுப்பது சாத்தியமே"


    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தசோகை இருந்ததால் சில நாட்களுக்கு முன்பாக ரத்தம் ஏற்றப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களில் அந்த ரத்தத்தை தானமளித்த இளைஞர், தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாகக் கூறினார். இதையடுத்து தானம் பெற்ற பெண்ணை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கும் எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

    இதற்குப் பிறகு அந்தப் பெண் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டார். உடனடியாக அவருக்கு எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டன. குழந்தை பிறக்கும்போது, அந்தக் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்படுமென்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வியாழக்கிழமை இரவில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் குழந்தை ஒரு கிலோ 700 கிராம் எடை இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். "தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்," என பிபிசியிடம் தெரிவித்தார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் டாக்டர் சண்முகசுந்தரம்.

    இப்போது பிறந்துள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுக்க என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன? "குழந்தை பிறந்த உடனேயே எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்தான நேவிரபைன் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது மாதத்திலும் 12 மாதத்திலும் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவும் வாய்ப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவு" என்று கூறினார் சண்முகசுந்தரம். தற்போது தாயையும் குழந்தையையும் 9 மருத்துவர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    "இந்த விவகாரத்தில் எச்.ஐ.வியைவிட மிகப் பெரிய பிரச்சனை, ஹெபடிடிஸ்-பி. அதை குழந்தைக்குக் கட்டுப்படுத்துவதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். தவிர, இம்மாதிரி எச்.ஐ.வி. பாதித்த தாய்களுக்கு இயல்பான பிரசவத்தைவிட, சிசேரியன் மூலம்தான் குழந்தை பிறப்பது பாதுகாப்பானது. காரணம், இயல்பான பிரசவத்தில் குழந்தை பிறக்கும் நேரத்தில் தாய் குழந்தையை வெளியேற்ற முயற்சிக்கும்போது தொப்புள்கொடி மூலம் கூடுதலான ரத்தம் குழந்தைக்குப் பாயும்" என்கிறார் ரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் அமலோற்பவநாதன்.ஆனால், இந்த விவகாரத்தில் குழந்தை இயல்பான பிரசவத்திலேயே நிகழ்ந்துள்ளது. இது குறித்து கேட்டபோது, "குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்தது. எடை முடிந்த அளவு அதிகரிக்கட்டும் என காத்திருந்தோம். ஆனால், அதற்குள் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துவிட்டது" என்கிறார் டாக்டர் சண்முகசுந்தரம்.

    ஹெபடிடிஸ்-பி நோயைப் பொறுத்தவரை, "நோயெதிர்ப்பு சக்திக்கான மருத்து அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. சரியான இடைவெளியில் மேலும் சில தடுப்பூசிகள் போடப்படும். ஆகவே ஹெபடிடிஸ்-பி ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு" என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரசவம் செய்திருக்கும் மருத்துவரான டாக்டர் அமுதா, மிகச் சரியான விதத்தில் கவனித்துக்கொண்டால் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதைத் தடுத்துவிடலாம் என்கிறார்.

    "குழந்தை பிறப்பதற்கு முன்பும் பிறந்த பிறகும் எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து அளிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு குழந்தைக்கும் ஏ.ஆர்.டி என்ற அந்த கூட்டு மருந்து அளிக்கப்படும். பொதுவாகப் பார்த்தால், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமே அளிக்காமல் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி இருக்கும் வாய்ப்பு 30-40%. மருத்துவம் அளித்தால், எச்.ஐ.வி பரவும் வாய்ப்பு 2 சதவீதத்திற்கும் குறைவு. நான் பார்த்த 1000க்கும் மேற்பட்ட பிரசவங்களில் ஒரு குழந்தைக்குக்கூட தாயிடமிருந்து எச்.ஐ.வி பரவவில்லை" என்கிறார் அமுதா. குழந்தை பிறந்து நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகுதான், தாயிடமிருந்து எச்.ஐ.வியும் ஹெபடிடிஸ்-பியும் குழந்தைக்கு பரவியிருக்கிறதா என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்குப் பிறகு இதனை மீண்டும் உறுதிசெய்துகொள்ள, 18வது மாதத்தில் ஒரு பரிசோதனை செய்யப்படும்.

    குழந்தைக்கு தற்போதைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் டீன் சண்முகசுந்தரம் தெரிவித்திருக்கிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad