சந்தேகக்காரனுக்கு விபரீத புத்தி
குழந்தை என் ஜாடையில் இல்லை.. யாருக்கோ பிறந்தது.. சந்தேக வெறியில் தந்தை செய்த கொடூர கொலை!
திருவண்ணாமலை: "குழந்தைக்கு என் ஜாடையில இல்லை... இது எவனுக்கோ பிறந்த குழந்தை" என்று சந்தேகம் மண்டைக்கேறிய பெற்ற தகப்பன், அந்த குழந்தையை அரிவாளால் கொன்ற சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி கார்த்திகேயன் - ராஜேஸ்வரி. இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. கடந்த அக்டோபர் மாதம்தான் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் சர்வேஸ்வரன். எப்பவுமே புருஷன்-பொண்டாட்டிக்குள் சண்டை இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக ராஜேஸ்வரி மீது கார்த்திகேயனுக்கு நிறைய சந்தேகம். இந்த சந்தேகம்தான் பெற்ற குழந்தைவரை வன்மம் வர காரணமாக அமைந்துவிட்டது. அதிக வெறுப்பு 5 வருஷம் கழித்து குழந்தை பிறந்தாலும், அதன்மீது ஒருவித வெறுப்பு காட்டி கொண்டே இருந்தார் கார்த்திகேயன். குழந்தை தன் ஜாடையில் இல்லை என்று சொல்லி இதைவைத்தும் தம்பதிக்குள் சண்டை நீடித்து வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமான வெறுப்பு அடைந்த கார்த்திகேயன் குழந்தையை கொல்லவே துணிந்துவிட்டார்.
அரிவாளால் வெட்டினார்
நேற்றுமுன்தினம் இரவு தூங்கி கொண்டிருந்த கார்த்திகேயன் திடீரென எழுந்து, பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த பெற்ற குழந்தையை அரிவாளை கொண்டு வெட்டி கொலை செய்தார். இதில் குழந்தையின் உடல் துண்டு துண்டாக சிதறியது. இதை பார்த்து ராஜேஸ்வரி அலறி துடித்ததும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். தப்ப முயன்ற கார்த்திகேயனை சுற்றி வளைத்து பிடித்து வாணாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில் சொன்னதாவது:
எவனுக்கோ பிறந்தது
"என் மனைவி மேல எனக்கு ஏற்கனவே நிறைய சந்தேகம் இருந்தது. அதனால் இந்த குழந்தை எனக்கு பிறந்திருக்காது என்று தோன்றியது. எவனுக்கோ பிறந்த குழந்தை, நாளைக்கு என்னை அப்பான்னு கூப்பிடுவதை என்னால ஏத்துக்க முடியாது. விறகு வெட்டும் அரிவாள் அதனால் அவனை கொன்னுடலாம்னு முடிவு பண்ணேன். இதை என் மனைவி, அப்பா கிட்ட கூட சொன்னேன். ஆனால் நான் கிண்டல் செய்றதா அவங்க நினைச்சிட்டாங்க. ஒரு கட்டத்துல ஆத்திரம் அதிகமாகி, வீட்டுல விறகு வெட்ற அரிவாளை எடுத்து குழந்தையை வெட்டி கொலை செய்துவிட்டேன்" என்றார். இதையடுத்து கார்த்திகேயனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
முகஜாடை
பொதுவாக குழந்தை பிறந்தால், குறைந்தது 6 மாசத்துக்கு முக ஜாடை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் பிறந்து 3 மாசம்தான் ஆகுது, அதுக்குள்ள எப்படி முகஜாடை தெரியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பச்சை குழந்தையை இப்படி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
கருத்துகள் இல்லை