வழியெல்லாம் வீடு, கடைகளை இடித்து கொண்டு கோதண்டராமர் சிலை பயணம் - திருவண்ணாமலையில் போக்குவரத்து முடங்கியது
திருவண்ணாமலை பேருந்து நிலையம் வழியாக, போக்குவரத்து மிகுந்த பகல் நேரத்தில், கோதண்டராமர் சிலை பயணம் செய்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பெங்களூர் ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட கோதண்டராமர் சிலையும், 7 தலை பாம்புடன் கூடிய சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் ஒரே கல்லிலான பாறை தேவைப்பட்டது. இந்த பாறை வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பதை அறிந்து, 66 அடி நீளம், 26 அடி அகலம் கொண்ட ஒரே கல்லில் அமைந்த பிரமாண்டமான சிலை வாகனத்தில் கொண்டு செல்ல தயாரானது.
இந்த சிலையை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் புறப்பட்டது. சேத்துப்பட்டு, திண்டிவனம், அவலூர்பேட்டை வழிகளில் சாலையோரம் வீடுகளையும், கடைகளையும் இடித்துக் கொண்டு சென்றது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிப்புக்கு உரிய இழப்பீடு வேண்டும் என்று கேட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள். பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கள் அன்று திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில், பேருந்து நிலையம் அருகில், ரவுண்டனா பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகல் நேரத்தில், சிலை லாரி பயணம் செய்தது. பயணத்திற்கு இடையூராக இருந்த கம்பங்கள், இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. போக்குவரத்து வேறு மார்க்கமாக திருப்பிவிடப்பட்டதால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
கருத்துகள் இல்லை