திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவமனையில் நீதிபதி மகிழேந்தி திடீர் ஆய்வு
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததாக போலி டாக்டர் ஆனந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன், ஆட்டோ டிரைவர் சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் நடத்தி வந்த ஸ்கேன் சென்டர் மற்றும் ஆனந்தியின் வீட்டுக்கு சீல் வைத்தனர். சொத்து, வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் போளூரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் டாக்டர் ஒருவர் சிக்கி உள்ளார்.
கலசபாக்கம் அருகே உள்ள கடலாடியை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதையடுத்து அந்த பெண் போளூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்து உள்ளார். அந்த மருத்துவமனையில் பலருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு புகார் வந்தன.
இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர், போளூர் மாஜிஸ்திரேட்டு தாமோதரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள், வருவாய்த் துறையினர், போலீசார் போளூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மருத்துவமனையின் டாக்டர் சுகந்தி என்பவர் மருத்துவமனையில் எந்த பதிவேடுகளும் முறையாக பாராமரிக்காதது தெரியவந்தது. மேலும் அவர் திருமணமாகாத கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக மாத்திரை, மருந்து மூலம் கருக்கலைப்பு செய்ததும், உரிய மருத்துவ நடைமுறைகளை பின்பற்றாமல் ஊழியர்களை வைத்து சிகிச்சை அளித்து வந்ததும், எந்தவித கணக்கு வழக்குகளும் இல்லாமல் மருத்துவமனை நடத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட டாக்டர் சுகந்தியை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சுகந்தியை போளூர் போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவர் சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படித்துள்ள டாக்டர் கருக்கலைப்பு புகாரில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை