Header Ads

  • சற்று முன்

    மணல் மாஃபியாவுடன் காவலர்கள் தொடர்பு - தொடர் விசாரணை - நெல்லை காக்கிகள் அச்சம்



    மணல் கடத்தல் கும்பலுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டு மாமூல் வசூலித்து வந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நெல்லை மாவட்ட காக்கிகள் வட்டாரத்தைக் கலங்க வைத்துள்ளது. 

    நெல்லை மாவட்டம் நம்பியாற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மணல் கொள்ளையைத் தடுப்பவர்களை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் லாரி ஏற்றி கொலை செய்வதால், அப்பாவி மக்கள் மணல் கடத்தல் கும்பலைக் கண்டும் காணாமல் இருந்துகொள்கின்றனர். ஏற்கெனவே, நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்தவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  

    கடந்த இரண்டு வருடங்களுக்குமுன் திசையன்விளை தலைமைக் காவலர் திருநாவுக்கரசு என்பவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். மிட்டார்குளத்தைச் சேர்ந்த மாணவர் செந்தில்குமார் மணல் கடத்தலைத் தடுத்தபோது லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுயம்பு செல்லப்பா என்பவர் லாரி மோதி கொல்லப்பட்டார். அதை விபத்து எனப் பதிவு செய்த போலீஸார், பின்னர் மணல் கொள்ளையர்கள் திட்டமிட்டு லாரி ஏற்றி கொன்றதாக கொலை வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே அதை மீண்டும் விபத்து என மாற்றிவிட்டார்கள்.

    இந்த நிலையில், விஜயநாராயணம் ஸ்டேஷனில் முதுநிலைக் காவலராகப் பணியாற்றிய ஜெகதீஷ் துரை என்பவர், நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனத்தை வழிமறித்தபோது, லாரியில் இருந்த கும்பல் அவரைக் கொடூரமாக கொலை செய்தது. இப்படி நம்பியாற்றில் மணல் திருடும் கொள்ளையர்கள் அட்டகாசம் செய்து வந்தபோதிலும், நம்பியாறு எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்கள் கண்மூடிக் கிடந்தன.

    நம்பியாற்றில் இருந்து மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திசையன்விளையைச் சேர்ந்த சின்னதுரை என்பவரை போலீஸார் கைது செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது, திசையன்விளை உள்ளிட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றும் அதிகாரிகள், காவலர்களுக்குப் பணம் கொடுத்தது தெரியவந்தது. 

    அவரிடம் இருந்த செல்போனை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி குறிப்பிட்ட சில காவலர்களுடன் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், செல்போனில் அனைவருடன் பேசியது பதிவாகி இருந்தது. அதில், திசையன்விளை இன்ஸ்பெக்டரின் கார் டிரைவரான சிவா என்ற காவலர், மணல் கொள்ளையர்களுடன் பணப்பரிவர்த்தனை செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் சிக்கின. சக போலீஸார் மற்றும் அதிகாரிகள் சிலருக்கும் அவர் பணம் பெற்றுக்கொடுத்தது தொடர்பாக விரிவாகப் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி தீவிர விசாரணை நடத்திய அவர், காவலர் சிவாவை கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் அவர் மீது திசையன்விளை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து பணம் பெற்றதை அவர் ஒப்புக் கொண்டதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது திசையன்விளை, விஜயநாராயணம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதனால் இதுபற்றி தீவிர விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி-யான் அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் திசையன்விளை காவல்நிலையத்தில் பணியாற்றும் குமார் கிருஷ்ணன் என்பவரும் மணல் கொள்ளையர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. தன் மீதான விவரங்கள் குறித்து விசாரிக்கப்படுவதை அறிந்ததும் காவலர் குமார் கிருஷ்ணன். தலைமறைவாகி விட்டார்.

    நெல்லை மாவட்டத்தில் இரு காவலர்கள் மணல் கொள்ளையருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், மணல் கொள்ளைக்கு உறுதுணையாகச் செயல்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள காக்கிகள் வட்டாரத்தை கலங்கச் செய்திருக்கிறது


    செய்தியாளர் : மோகன் ராஜ் - திருநெல்வேலி 




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad