Header Ads

  • சற்று முன்

    விவசாயிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


    ஓசூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த ராகி பயிர்களை அரசு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அழித்தனர். அறுவடைக்கு தயாரான ராகி பயிர்களை அழித்த அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் குடும்பத்துடன் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஓசூர் அருகேயுள்ள அந்திவாடி கிராமத்தை சேர்ந்த லட்சுமப்பா என்பவரின் மகன் எல்லப்பா, அதே பகுதியை சேர்ந்த முனியப்பா என்பவரின் மகன் மற்றொரு எல்லப்பா இவர்கள் இருவரும் விவசாயிகள், கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அந்திவாடி பகுதியில் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். தங்களுடைய குடும்பத்திற்கு தேவையான ராகி பயிர்களை இந்த நிலத்தில் சாகுபடி செய்து உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். 

    இந்த அரசு புறம்போக்கு நிலத்தில் அரசாங்கம் சார்பில் அரசுப்பள்ளி கட்டிடம் கட்ட உள்ளதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான ராகி பயிர்களை அழித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த விவசாயிகள் குடும்பத்துடன் ஜேசிபி இயந்திரத்தை மறித்து சிறைபிடித்தனர்.

    பின்னர் அதிகாரிகளை கண்டித்து ஜேசிபி வாகனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  காலம் காலமாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம், தற்போது ராகி சாகுபடி செய்து அறுவடைக்கு வர உள்ள நிலையில் எங்களிடம் எந்த வாத்தையும் கூறாமல் நன்கு விளைந்த ராகி பயிர்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அழித்தால் என்ன நியாயம் என கேள்வி எழுப்பிய விவசாயிகள், இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாற்று விவசாய நிலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad