• சற்று முன்

    கஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை


    கஜ புயல் தொடர்பான சம்பவங்களில் தமிழ்நாட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தப் புயல் தமிழ்நாட்டின் உள்மாவட்டமான திண்டுக்கல் அருகில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

    நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கரையைக் கடந்த கஜ புயல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள ரயில் நிலையம் இந்தப் புயலால் சூறையாடப்பட்டுள்ளது. ஆனால், ரயில் நிலையம் தொடர்ந்து இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதிவேக ரயில்கள் எதுவும் ரத்துசெய்யப்படவில்லை. மாயவரம் - தஞ்சாவூர் பயணிகள் ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 500 மின் கடத்திகள், 100 டிரான்ஸ்பார்மர்கள், 500 கி.மீ. தூரத்திற்கு மின் வழிப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்குள் 2 நாட்களுக்குள் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படுமெனவும் பிற பகுதிகளில் இன்று மாலையே மின் இணைப்புகள் சீரமைக்கப்படுமெனவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.
    தற்போது கஜ புயல் திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


    இதனால், மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கரூர், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை நீடிக்குமெனவும் மீனவர்கள் இன்று மதியம் முதல் மீண்டும் கடலுக்குச் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad