இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராக நாடாளுமன்றத்தில், இன்று (புதன்கிழமை) நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்ததாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணையை உறுதிப்படுத்திய ஆவணம் தன்னிடம் வழங்கப்பட்டதாகவும் சபாநாயகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உறுப்பினர்களின் கையெழுத்துடன் இதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் சபாநாயகர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறியதா?
காலை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ராஜ்பக்ஷவுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக ஊடகத்திடம் தெரிவித்தார் ரணில் விக்கரமசிங்க.
கருத்துகள் இல்லை