Header Ads

  • சற்று முன்

    புஷ்கரம் என்றால் என்ன ? மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்


    "குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.

    நதிகள் அனைத்தையும் தெய்வமாகவே வழிபடுவது நமது சம்பிரதாயமாகும். அதிலும் இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை அதிகம் உண்டு. தென்னிந்தியாவில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி நதி. இந்த நதி மட்டுமே தமிழகத்தில் உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் நதி.


    ஈசனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி

    சிவபெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு நோக்கி செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘உறுதியாக செல்கிறேன் ஸ்வாமி ஆனால் அங்கு பேசப்படும் பாஷை தெரியாது. எனவே எமக்கு அருள்கூர்ந்து கூறியருள்க” என்றவுடன் ஈசன் தம் அருகே அவரை அமரவைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார்.

    ஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார்.செப்பு (தாமிர) வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாமிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று.


    143 படித்துறைகள்
    அகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. இந்த நதி உருவாகும் பாபநாசம் முதல் கடலில் சங்கமிக்கும் புன்னைக்காயல் வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன.

    இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

    விருச்சிக ராசியில் குருப்பெயர்ச்சி
    திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி புஷ்கரம் ஆரம்பம்.23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். அதன் விபரம் வருமாறு:-

    தேதி (கிழமை) ராசி

    12.10.2018 (வெள்ளி) விருச்சிகம்

    13.10.2018 (சனி) தனுசு

    14.10.2018 (ஞாயிறு) மகரம்

    15.10.2018 (திங்கள்) கும்பம்

    16.10.2018 (செவ்வாய்) மீனம்

    17.10.2018 (புதன்) மேஷம்

    18.10.2018 (வியாழன்) ரிஷபம்

    19.10.2018 (வெள்ளி) மிதுனம்

    20.10.2018 (சனி) கடகம்

    21.10.2018 (ஞாயிறு) சிம்மம்

    22.10.2018 (திங்கள்) கன்னி

    23.10.2018 (செவ்வாய்) துலாம்

    ஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தேதி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.

    தானம் கொடுத்தல்
    இந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய்வது சிறப்பு. கோதானம் - வஸ்திர தானம் - அன்னதானம் ஆகியவை செய்வது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.

    தர்ப்பணம் கொடுத்தல்
    இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். சொல்லப்பட்டுள்ள 143 படித்துறைகளில் ஏதாவது ஒன்றில் தர்ப்பணம் செய்வது நல்ல பலன்களை அள்ளித்தரும்." -  https://buc.kim/d/5chpmvgBzd0o

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad