சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி அனைத்து கட்சியினர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி சார்பில் கோட்டாட்சியரிடம் அனைத்து கட்சியினர் மனு அளித்தனர்.
கோவில்பட்டி நகராட்சியில் ஏ, பி, சி, டி என்று 4 மண்டலங்களாக இருந்ததை, தற்போது ஏ, பி, சி என 3 மண்டலங்களாக பிரித்து சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கோட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி, நேற்று திமுக நகர செயலாளர் கா.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகர உதவி செயலாளர் முனியசாமி, மதிமுக நகர செயலாளர் பால்ராஜ், காங்கிரஸ் நகர தலைவர் சண்முகராஜா உள்ளிட்ட பலர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, கோட்டாட்சியரிடன் நேர்முக உதவியாளர் சூரிய கலாவிடம் மனு அளித்தனர்.
மனு விபரம்:
கோவில்பட்டி நகராட்சியில் உள்ள பழைய சொத்து வரிவிதிப்புகளுக்கு சில வார்டுகளில் மட்டும் மறு சீராய்வு என்ற முறையில் நகராட்சி உயர்த்திய கட்டணத்தை ரத்து செய்து நீதிமன்ற உத்தரவுபடி நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களின் நலன் கருதி மேற்படி கோரிக்கை நிறைவேற்றி தரும்படி கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால், வரும் அக்.22-ம் தேதி ஆர்ப்பாட்டமும், 25-ம் தேதி சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை