• சற்று முன்

    கோவில்பட்டியில் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பாளர் இறுதி பட்டியல் அறிவிப்பு செய்வதில் தாமதம் - தேர்தல் அதிகாரியை தாக்க முயற்சி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இங்கு தலைவர், செயலாளர் உட்பட 11 உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்.11-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ம் தேதி நடந்தது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. 


    இதனால் காலை முதல் வேட்புமனு தாக்கல் செய்தவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். மாலை 5 மணிக்கு மேலாகியும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரி சுப்பையா அறிவிக்கவில்லை. மேலும் வேட்புமனு தாக்கல் செய்தவர்களை அலுவலகத்தில் உள்ளே விடாத காரணத்தினால் காவல்துறை மற்றும் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதனை தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் உள்ளே அனுப்பிவைத்தனர். தேர்தல் அதிகாரி சுப்பையா தொடர்ந்து காலதமதம் செய்த காரணத்தினால் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, அங்கிருந்து மேஜையை தள்ளிவிட்டு தேர்தல் அதிகாரி சுப்பையாவை தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரியை காவல்துறையினர் பாதுகாத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் மற்றும் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். 

    போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் வேட்புமனு தாக்கல் செய்த 44 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரி சுப்பையா அறிவிப்பு பலகையில் ஒட்டினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad