கோமாரி நோயால் கால்நடை இறப்பு - விவசாயிகள் பீதி............
ஓசூர் பகுதியில் கால்நடைகளை தாக்கி வரும் கோமாரி நோய் : கிராமங்கள் தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த விவசாயிகள் கோரிக்கை
ஓசூர் பகுதிகளில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு கோமாரிநோய் பரவி வருகிறது. நோய் தாக்குதலுக்கு ஆளான மாடுகள் உணவு உட்கொள்ளாமல் வாயில் நுரை தள்ளியும், கால்களில் புண்களுடன் அவதிப்பட்டு வருவதால் அதனை வளர்க்கும் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். உடனடியாக கிராமங்கள் தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு கோமாரிநோய் பரவி வருகிறது. ஓசூர் அடுத்துள்ள அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகள் வளர்க்கும் 100க்கும் மேற்பட்ட மாடுகள் இந்த கோமாரி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலால் மாடுகள், வாயில் நுரை தள்ளியபடியும், மடி, உள்வாய், மற்றும் கால் குளம்புகளில் கொப்புளங்கள் உண்டாகி புண்ணாக மாறி வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாடுகள் மந்த நிலையுடன் உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வருகிறது. நோய் தாக்கம் பசுமாடுகளில் பால் உற்பத்தியை குறைக்கிறது. பசுக்களிள் பாலை குடிக்கும் கன்றுகளுக்கும் இந்த நோய் அதிரடியாக பரவி வருகிறது. மேலும் சினையாக உள்ள மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் நிலை ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இந்த நோயை பரப்பும் வைரஸ் தண்ணீர் மற்றும் காற்றின் மூலமாக பரவுவதால் மாடுகளை தாண்டி ஆடுகள், பன்றிகள், எருமை மாடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அக்கொண்டப்பள்ளி, அச்செட்டிப்பள்ளி, குந்துமாரணப்பள்ளி, பைரமங்களம், எம்.அக்ரகாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது.
எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட கால்நடைகளை காக்க கிராமங்கள் தோறும் கோமாரிநோய் தடுப்பு மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை