• சற்று முன்

    நிலக்கரி இறங்குதளம் வேண்டாம்' - நாட்டுப்படகுகளில் சென்று முற்றுகையில் ஈடுபட்ட மீனவர்கள்!


    உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தில் கல்லாமொழி கடல்பகுதியில் நிலக்கரி சரக்கு கையாளும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட படகுகளில் கடல்வழி முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர்.

    துாத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1,600 மெகா வாட்ஸ் மின்சார உற்பத்தித்திறன் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2009-ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்ட உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை மீண்டும் அரசு செயல்படுத்த உள்ளது.

    இந்த அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு வர, திருச்செந்துார் அருகே உள்ள கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி இறங்குதளம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இறங்குதளம் அமைக்கப்பட்டால், கடல்வளம் பாதிக்கப்படும். மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது. மீனவர்களின்  வாழ்வாதாரம் கெடும் எனக் கூறி, இறங்குதளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி, முதல்வருக்கு நாட்டுப்படகு மீனவர்கள் பல முறை ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    மீனவர்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் கடலில் பாலம் அமைக்கப்படும் என உடன்குடி அனல்மின் நிலைய திட்ட அதிகாரிகள் விளக்கமளிக்கப்பட்ட போதிலும் மீனவர்கள் ஏற்கவில்லை. இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கறுப்புக்கொடி கட்டி, கல்லாமொழி கடல்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்குதளத்தை படகில் கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ``மத்திய அரசின் (CRZ -2011) கடல் மேலாண்மை மண்டலப் பகுதியான கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரை உள்ள 365 கி.மீ கடற்கரையில் 500 மீட்டர் தூரமும், கடலில் இருந்து 12 கடல் மைல் தூரம் வரை எவ்வித கட்டுமானமும் அமைக்கக் கூடாது என்ற விதியுள்ள நிலையில், உடன்குடி மின் திட்டத்துக்கான பணிகளைச் செயல்படுத்த முயல்வது சட்டவிரோதம்" எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

    கல்லாமொழி கடற்கரை கிராமத்தினைச் சுற்றிலும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

    செய்தியாளர் : கதிரவன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad