இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்: எதற்காக இந்த போராட்டம்?
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்/
எதற்காக இந்த போராட்டம்?
கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், தமக்கெதிராக எவ்வித வழக்குகளும் தொடுக்கப்படவில்லை எனக் கூறியும், தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலக்குறைவுடன் இருந்த ஒரு சிறைக்கைதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ணாஇந்தப் போராட்டம் குறித்து, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேலுடன் பிபிசி தமிழ் பேசியது.
''அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் ஒரு கைதி நோய்வாய்ப்பட்டதாகக் கூறி கொழும்புவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அனுராதபுர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க முடியாது எனக் கூறியே இந்த சிறைக்கைதி கொழும்புவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், கொழும்பு வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த சிறைக்கைதிக்கு ஏன் அனுராதபுரத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கவில்லை என்ற கேள்வி எழுக்கிறது. சிறைக்கைதியை கொழும்புவிற்கு அனுப்பி, இந்த போராட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர்.'' என்றார் அருட்தந்தை சக்திவேல்.
வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை
''அரசியல் கைதிகள் விடுக்கப்படவேண்டும் என தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கையை பிரதமர் ஏற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியிருந்தார். வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி, இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். எனினும், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதி, இலங்கையில் அரசியல்கைதிகள் எவரும் இல்லையென்று கூறுகிறார். 'சாவதற்கு அன்றி வாழ்வதற்கே' அரசியல் கைதிகள் போராட்டம் நடத்துகின்றனர்.'' என்றும் அருட்தந்தை சக்திவேல் கூறினார். விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.''அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்புவில் உள்ள அரசியல் கைதிகளும் அடையாள உண்ணாப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அரசியல் கைதிகளின் பிரச்சனை, குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்க்கப்படாவிட்டால், சாகும்வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக கொழும்புவிலுள்ள அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். இந்த அரசாங்கம் தமக்கு நியாயத்தை வழங்கும் என்று அரசியல் கைதிகள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்ததன் அறிகுறியாகவே அவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.'' என்றார் அருட்தந்தை சக்திவேல்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை
அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள போராட்டம் குறித்து சிறைக்கைதிகளின் உரிமைகளைக் காக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.
''சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை எனக் கூறி இந்தக் கைதிகளின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரத்தில் உள்ள எட்டு சிறைக்கைதிகள் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.செல்வராஜ் என்ற சிறைக்கைதி கொழும்புவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் அரசியல் கைதிகளின் உரிமைகளை முடக்க முயற்சிக்கின்றனர். இதனை ஏற்க முடியாது. இவர்களுக்கெதிரான வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்த சிறைக்கைதிகளின் கோரிக்கை'' என்றார் நந்திமால்.
பொது மன்னிப்பு வழங்குவதே சிறந்த தீர்வு
இந்தப் பிரச்சனைக்கு பொது மன்னிப்பு வழங்குவதே சிறந்த தீர்வு என அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியின் பொதுச் செயலாளர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேசரீதியிலும் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே எதிர்காலத்தை சுபிட்சமாக்க முடியும். சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி, மன்னிப்பளிப்பதாகும்'' என்றார்.
கருத்துகள் இல்லை