Header Ads

  • சற்று முன்

    ஓசூரில் அ.தி.மு.க பிரமுகரை கடத்தி சென்று கொடுரமான முறையில் கொலை !



    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் குள்ளப்பா. இவரது மகன் முனிராஜ் (33). அ.தி.மு.க. பிரமுகர். தொரப்பள்ளி கிராமத்தில் கூட்டுறவு சங்க நிர்வாக குழு இயக்குனர், மேலும் ஓசூரைச் சேர்ந்த அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 15 ஆம் தேதி இவர் ஓசூரில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக மோட்டார்சைக்கிளில் வந்தார். ஓசூரில் பாகலூர் சாலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகில் உள்ள ஆவின் பூத் அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அவரது தம்பி எல்லப்பா ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் முனிராஜின் மோட்டார்சைக்கிள் பாகலூர் சாலையில் இருப்பதை அறிந்த போலீசார் நேற்று காலை அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
    அப்போது முனிராஜ் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு அ.தி.மு.க. கட்சி அலுவலகம் சென்று வந்ததாகவும், அப்போது அவ்வழியாக காரில் வந்த சிலர் அவரை அழைத்துக் கொண்டு சென்றதாகவும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முனிராஜ் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.

    இந்த நிலையில் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் மற்றும் அத்திப்பள்ளி இடையே பிருந்தாவன் கார்டன் என்னும் இடத்தில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஆனேக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் இது சம்பந்தமாக அருகில் உள்ள ஓசூர் அட்கோ, சிப்காட், டவுன், மத்திகிரி போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஓசூர் அட்கோ போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அதில் கொலையுண்டு கிடந்தது ஓசூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முனிராஜ் என தெரிய வந்தது. அவரது தலை தனியாக துண்டிக்கப்பட்டு அருகிலேயே கிடந்தது. மேலும் 2 கைகளையும், காலையும் மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர்.  இதைத் தொடர்ந்து கொலையுண்ட முனிராஜின் உடலை ஆனேக்கல் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆனேக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2010 ஆம் ஆண்டில் ஓசூரில் முரளி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முனிராஜ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, அந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் முனிராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். முனிராஜ் கடத்தப்பட்ட வழக்கு ஓசூர் அட்கோ போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவரது உடல் ஆனேக்கல்லில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தற்போது இரு மாநில போலீசாரும் இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூரில் அ.தி.மு.க. பிரமுகர் காரில் கடத்தப்பட்டு, தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எமது செய்தியாளர் : ஓசூர் - சி. முருகன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad