• சற்று முன்

    புழல் சிறையில் இருந்து கருணாஸை வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


    முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    சென்னை வள்ளுவர் கோட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில், கடந்த 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த அமைப்பின் தலைவரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பங்கேற்று பேசினார்.
    அப்போது, முதலமைச்சரையும், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பற்றியும், சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இவரது பேச்சு, யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதன் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலைய போலீசார், கருணாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது, கொலை முயற்சி, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், சாதி-இன மோதல்களைத் தூண்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    கருணாசை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று அதிகாலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் இல்லம் முன்பு குவிந்த போலீசார், அதிகாலையிலேயே கருணாஸின் ஆதரவாளர்கள் திரளுவதை கட்டுப்படுத்துவதற்காக, அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
    பின்னர் இந்த நடவடிக்கைகள் கருணாசுக்கு தெரிவிக்கப்பட்டு, அதிகாலை 5.50 மணியளவில், அவர் கைது செய்யப்பட்டார். நீண்ட நேரத்திற்கு பின்னர் வீட்டை வெளியில் வந்த கருணாசை, 6.35 மணியளவில், காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய கருணாஸ், வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
    எம்.எல்.ஏ. கருணாசுடன், முக்குலத்தோர் புலிப்படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வ நாயகமும், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் கைது செய்யப்பட்டார். இருவரும், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு வந்த கருணாஸ் ஆதரவாளர்கள், காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    இந்நிலையில், எம்.எல்.ஏ. கருணாசை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் சான்றளித்ததை அடுத்து, எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
    எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில், கருணாஸ் மற்றும் செல்வநாயகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கருணாஸ் மீது போடப்பட கொலை முயற்சி வழக்குக்கு, அவரது தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதியும் அந்த வழக்குக்கு ஆட்சேபம் கூறியதால், தேவைப்பட்டால், அந்த வழக்கை ரத்து செய்வதாக போலீசார் உறுதியளித்தனர்.
    இதையடுத்து, கருணாஸ் எம்.எல்.ஏ.வையும், செல்வ நாயகத்தையும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் புழல் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    இதையடுத்து, கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நீதிபதி ஆட்சேபனை தெரிவித்ததை கருத்தில் கொண்ட போலீசார், உயரதிகாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு, அந்த வழக்குப் பிரிவை நீக்கினர். மேலும், புழல் சிறையில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக, வேலூர் சிறைக்கு மாற்ற சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, உரிய பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு கருணாஸ் கொண்டு செல்லப்பட்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad