கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமூக நல்லிணக்க ஊர்வலம்
கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4 மணிக்கு மகா சங்கல்பம், புண்யாகவாஜனம், கும்ப பூஜைகளும், தொடர்ந்து மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் முன்பிருந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த குடம், பால்குடம், கோலாட்டம், சிலம்பாட்டம், இந்திய தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வண்ணம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கலாசார பாரம்பரிய உடைகளுடன் குழந்தைகளும், பெண்களும் கைகளில் மாவிளக்கு ஏந்தி, ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, விநாயகருக்கு 21 வகை சிறப்பு அபிஷேகமும், அதனையடுத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சப்பர திருவீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழு கமிட்டியினர் செய்திருந்தனர்.
அதுபோல, கோவில்பட்டி வள்ளுவர் நகர் சித்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பால்குட ஊர்வலம், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர், சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டார். பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
அதுபோல, கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சமுக விநாயகர், லாயல் மில் காலனி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், ஜோதி நகர் ஜோதி விநாயகர் கோயில், பசுவந்தனை சாலை வலம்புரி திருகுழந்தை விநாயகர், சண்முகசிகாமணி நகரில் உள்ள மங்கள விநாயகர், அரசு அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஜெயகணபதி ஆலயம் உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை