Header Ads

  • சற்று முன்

    ஸ்டெர்லைட் ஆலையை கொல்லைப்புறமாக திறக்க முயற்சி – சி.பி.எம். மத்தியக்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு


    டெல்லியில் கட்டப்பட உள்ள சுர்ஜித் பவன் கட்டிட நிதி அளிப்பு விழா கோவில்பட்டியில்  நடந்தது. இதில் பங்கேற்க வந்த மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் வாசுகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கோவில்பட்டி 2வது குடிநீர் திட்டத்தை தமிழக முதல்வர் வந்து திறந்து வைத்தார். ஆனால், முழுமையாக பணிகள் முடிவடையும் முன்னரே திறந்து வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஒரு சில இடங்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறையும், சில பகுதிகளுக்கு 17 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பணிகள் நிறைவடையும் முன் அதன் தொடங்கி வைக்க வேண்டிய அவசியம் என்ன?. திறப்பு விழாவின்போது முதல்வர், தினமும் கோவில்பட்டி மக்கள் தண்ணீர் கிடைக்கும் என்றார். இது  தேர்தல் கால வாக்குறுதி அல்ல, தற்போது சொன்ன வாக்குறுதியை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் 2015ல் சிறுதொழில் பட்டியலில் இருந்து தீப்பெட்டியை நீக்கினர். ஜிஎஸ்டியில் 18 சதவீத வரி விதிப்பால், தீப்பெட்டி சிறு உற்பத்தியாளர்களை பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தொழிற்சாலையையே மூடிவிட்டனர். இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பது என்பது மோடி அரசின் தேர்தல் வாக்குறுதியாக உள்ளது. ஆனால், உயர் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் ஏராளமான சிறு, குறு, நடுத்தர தொழில்களை மூட வைத்துள்ளது. தமிழக அரசு சட்டமன்றத்தில், அவர்களது கொள்கை குறிப்பை முன் வைத்த போது, கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் மூடப்பட்டிருக்கிறது. சுமார் 5 லட்சம் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர் என அரசே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.மோடி அரசு கூறி வாக்குறுதிக்கு நேர்மாறாக, ஜிஎஸ்டி வந்தபின்னர் இருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகும் அவலம் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் வரும்.


    தமிழகத்தில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தி விதிக்கப்பட்டுள்ளது. இதுவும் சாதாரண மக்களை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களையும் பாதிக்கும். முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி, நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் போய் கூற முடியும். தேர்தலும் நடைபெறவில்லை. நீதிமன்றம் பலமுறை கூறியும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் தான் அரசு தான் தோன்றித்தனமாக சொத்து வரி உள்ளிட்ட பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது. நூறு நாள் வேலையில் பல இடங்களில் கட்டுமான பணியையும் கொண்டு வருகின்றனர். அரசாணை கொடுத்தே நூறு நாள் வேலையின் அடிப்படையான பல அம்சங்களை நிர்மூலமாக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.ஜேசிபி போன்ற இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என நூறு நாள் வேலை திட்ட விதியில் உள்ளது. ஆனால், கட்டுமான போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து ரூ.50 வாடகை கட்டணமாக பிடித்தம் செய்து கொள்கின்றனர். 

    தமிழகத்தில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் காவல்துறையின் நிலைபாடு என்னவென்றால், அரசு கொள்கை முடிவை யாரும் விமர்சிக்க கூடாது. அரசின் கொள்கை முடிவை எதிர்த்து பேசவோ, துண்டு பிரசுரம் விநியோகிக்கவோ, நடைபயணம் மேற்கொள்ளவோ கூடாது. இது எந்த சட்டத்தில் உள்ளது. இப்படி கூறுவதற்கு தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ எந்தவித உரிமையும் கிடையாது. சென்னை-சேலம் 8 வழிச்சாலையை கண்டித்து திருவண்ணாமலையில் இருந்து மார்க்சிஸ்ட் சார்பில் நடைபயணம் தொடங்கினோம். முதலில் நடைபயண தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லையென்ற கூறிய காவல்துறை, பின்னர் நடைபயணத்துக்கே அனுமதி இல்லை என்றனர். எங்களை கைது செய்யுங்கள் என்று கூறியபோது, வலுகட்டயமாக ஜாமினில் வெளியே அனுப்பி விட்டனர். இந்த 8 வழிச்சாலையால் பாதிப்புகளை ஏன் போய் சொல்ல கூடாது. விவசாயிகளை ஏன் போய் பார்க்க கூடாது.

    கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற பிரன்ச் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகால ஒப்பந்தத்துக்கு விட்டுள்ளனர். ரூ.3150 கோடி ஒப்பந்தம் என்பது அந்த மாநகராட்சியின் 10 வருட நிதிநிலை அறிக்கைக்கு சமம். மேலும், அங்குள்ள பொதுக்குழாய்கள் மூடப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் சூயஸ் நிறுவனம் வைத்தது தான் சட்டம். அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்தால் தண்ணீர் என்று அர்த்தம். குடிநீர் விநியோகத்தை அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை சேவையாக பார்க்காமல்,  தனியார் லாபமாக பார்ப்பது கொள்கை ரீதியாக தவறான விஷயம். இன்று கோவையில் தொடங்கும் நாளை கோவில்பட்டி வரை வரும்.

    ஸ்டெர்லைட் பிரச்சினையில் இதுவரை எந்தவொரு போலீஸ் மீது நடவடிக்கையும் இல்லை. எல்லாமே பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினையாக தான் உள்ளது. தற்போது பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளுக்கான திறந்து வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முழுக்காரணம் தமிழக அரசின் செயல்படாத தன்மை.ஒருபுறம் அரசாணை போட்டு ஆலையை மூடுவது. மறுபுறம் தீர்ப்பாயத்தில் முறையாக வாதங்களை எடுத்து வைக்காமல் படிப்படியாக ஸ்டெர்லைட் ஆலைய முழுமையாக திறக்கும் ஏற்பாட்டை கொல்லைபுறம் வழியாக செய்வது. இதை நோக்கி தான் தமிழக அரசு செல்கிறதோ என்ற அச்சமும், சந்தேகமும் உள்ளது.

    தலித் மக்கள், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை எந்தவிதமான வரன்முறை இல்லாமல் நடந்து வருகிறது. இதில் தமிழக அரசு, காவல்துறையின் தலையீடு போனதுமானதாக இல்லை. குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு பல்மடங்கு அதிகரித்துள்ளது. போராடுகிற அமைப்புகளை, அரசியல் கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி என்ன செய்தால் இதை தடுக்கலாம் என்கின்ற வழிமுறையை தேடக்கூட முடியாத அரசாக எடப்பாடி அரசு உள்ளது.

    முகுளத்தூர் காவல்நிலையத்தில் மணிகண்டன் என்ற இளைஞர் சிறையில் மரணமடைந்துள்ளார். காவல்துறையினர் அடித்து கொலை செய்துள்ளனர். அவரது குடும்பத்தை நிர்பந்தத்தின் மூலம் அவர்களை மேற்கொண்டு சட்டரீதியாக புகார் கொடுக்கவிடாம்ல செய்துள்ளனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் மனித உரிமை அங்கு சென்று விசாரித்தபோது, அந்த இளைஞர் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்துபோது தான் அவர் இறந்துள்ளார். இதற்கு காவல்துறை பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாலையில், நிதி அளிப்பு விழா நடந்தது. விழாவில் மாநில குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, நகர செயலாளர் ஆர்.முருகன், ஒன்றிய செயலாளர் எல்.பி.ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர் ஏ.சக்திவேல்முருகன், வி.முருகன், அபிராமி முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad