• சற்று முன்

    தரிசனக் கட்டணம் பலமடங்கு உயர்வால் திருச்செந்தூர் பக்தர்கள் அதிர்ச்சி



    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அபிஷேக தரிசனக் கட்டணம் மற்றும் அபிஷேக வி.ஐ.பி தரிசனக் கட்டணம், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், இவற்றில் கடற்கரை ஓர ஸ்தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு விஸ்வரூபம், உதயமார்த்தாண்டம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம், ஏகாந்தம், பள்ளியறை பூஜை உள்ளிட்ட 9 கால பூஜைகள் தினமும் நடக்கின்றன. இதில், காலை 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பகல் 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், இரவு 7 மணி அர்த்தசாம அபிசேகம் ஆகிய மூன்று காலங்களில் அபிஷேகம் மற்றும் தரிசனம் முக்கியமானது. இந்த அபிஷேக நேரங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, இதுவரை அபிஷேக தரிசன கட்டணமாக ரூ.200ம், வி.ஐ.பி தரிசனக் கட்டணமாக ரூ.1,000மும் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது.

    இந்நிலையில், திடீரென அபிஷேக தரிசனக் கட்டணத்தை ரூ.200 -லிருந்து ரூ.500 ஆகவும், வி.ஐ.பி தரிசனக் கட்டணத்தை ரூ.1,000 -லிருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, மாதந்தோறும் நடக்கும் வளர்பிறை சஷ்டி, கிருத்திகை மாதாந்திர வெள்ளிக்கிழமை ஆகிய விசகபஷ நாள்களில் மட்டும் அபிஷேக தரிசனக் கட்டணமாக ரூ. 2,000-ம், வி.ஐ.பி அபிஷேக தரிசனக் கட்டணம் ரூ.10,000-மும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்தில் நடக்கும் இந்த விசேஷ நாள்களில் மட்டும் வழக்கமான தொகையைவிட 4 முதல் 5 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு, கடந்த மாதம் 27-ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், " இக்கோயிலில் அபிஷேகம் மற்றும் தரிசனக் கட்டண உயர்வுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. கட்டண உயர்வுகுறித்து கோயில் முன்போ, திருக்கோயில் அலுவலகத்தின் முன்போ, அலுவலகத்தின் வளாகத்திலோ எந்த இடத்திலும் அறிவிப்புப் பலகை வைக்கவில்லை. தரிசனத்துக்காக டிக்கெட் எடுக்கச் செல்லும் போதுதான் கட்டண உயர்வு செய்யப்பட்டதை ஊழியர் சொல்கிறார். கட்டண உயர்வு தெரியாமல் சுவாமி தரிசனத்துக்காக வரும் வெளியூர் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், குடும்பத்துடன் தரிசனம் செய்ய முடியாத நிலைகூட உள்ளது. இவ்வாறு உயர்த்தப்படும் கட்டணம் மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது; இதன்மூலம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யலாம்.ஆனால்,சுற்றுப்பிராகார மண்டபம் இடிந்துவிழுந்து ஒரு வருடம் ஆகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை" என்றனர் மக்கள் வேதனையுடன்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad