Header Ads

  • சற்று முன்

    சட்டவிரோத அதிவேக பிராட்பேன்ட் இணைப்பக முறைகேடு வழக்கில், விசாரணையை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உத்தரவு



    பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல்முறையீட்டை ரத்து செய்து விட்ட உச்சநீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

    தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் சிபிஐ நீதிமன்றம் மார்ச் 14ஆம் தேதி விடுவித்தது. இதை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 7 பேரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என ஜூலை 25ஆம் தேதி தீர்ப்பளித்தார். தயாநிதிமாறனுக்கு எம்.பி. மற்றும் அமைச்சர் என்ற முறையில் கொடுக்கப்பட்ட இணைப்புகளை விட அதிக இணைப்புகளை சட்டவிரோதமாக பெற்று கலாநிதிமாறனுடன் இணைந்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதை நிரூபிக்க சி.பி.ஐ. சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் போதுமானவை எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் வழக்கை சந்திக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறிவிட்டது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளுமாறு குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் உத்தரவிட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad