Header Ads

  • சற்று முன்

    இன்றுடன் ஏறக்கட்டிய பிரச்சாரம் - ஜெயிக்கப் போவது யாரு ?


    ர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதை முன்னிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகப் பிரசாரம் நிறைவடைய வேண்டும் என்பதால், வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் முடிவுக்கு வந்தது.
    பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கர்நாடகத்தில் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடும் பி.எஸ். எடியூரப்பா மற்றும் பலர் அக்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்துள்ளனர்.
    தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நாளில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமித் ஷா, இந்தத் தேர்தலில் பி.ஜே.பி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் என்றும், பிரதமர் மோடியின் செல்வாக்கு கர்நாடக மக்களிடத்தில் பி.ஜே.பி-க்கு வெற்றியைத் தேடித்தரும் என்றும் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளின் ஆதரவு பி.ஜே.பி.-க்குத் தேவையிருக்காது என்று குறிப்பிட்ட அவர், நாடு சுதந்திரமடைந்த பின்னர், சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசுதான் மிகவும் வெற்றியடையாத அரசு என்றார்.
    கடந்த 5 ஆண்டுகால சித்தராமையா அரசில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும் அமித் ஷா கூறினார். பி.ஜே.பி. வெற்றிபெற்றால் கர்நாடகத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றார். 
    பெங்களூரு நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மாநகர ஆணையர் பிறப்பித்துள்ளார். இந்த மாநிலத்தில் இதுவரை மொத்தம் 171 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    தேர்தலை நேர்மையாகவும், எவ்வித அசம்பாவிதங்களின்றியும் நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்துள்ளனர்.
    காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களும், தலைவர்கள் பலரும் பிரசாரம் நிறைவடைந்த நாளில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பற்றி கடுமையாகக் குறைகூறிய ராகுல் காந்தி, கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் ஒருமுறை கூட செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கவில்லை என்றார். ஆனால், தான் பலமுறை செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பேட்டியளித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
    கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால், பிரதமர் பதவியை ஏற்பேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பி.ஜே.பி. சார்பில் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன், மோடி பிரதமராவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.
    கர்நாடக மாநிலத்தில் வெற்றிபெறுவதன் மூலம் தென் மாநிலங்களில் கால்பதித்து விடலாம் என்ற அடிப்படையிலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கர்நாடகத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதாலும் இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் பி.ஜே.பி. தீவிரமாகக் களமிறங்கி, பிரசாரம் செய்துள்ளது. 
    அதேபோல், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் முக்கியமான ஒரு மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால், மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய உத்தியாகவும் இந்த தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சி கருதுகிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad