Header Ads

  • சற்று முன்

    கர்நாடகா தேர்தல்: மூன்று கட்சிகளுக்குமே முக்கியமானது! ஏன்?


    இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் தேர்தலாக மாறியிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தல், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பெரிய கட்சிகளுக்குமே மிக மிக முக்கியமான தேர்தலாக உருவெடுத்திருக்கிறது. கோடைகாலமாக இருந்தாலும் வழக்கம்போல பெங்களூரு நகரம் ஒப்பீட்டளவில் குளுமையாகவே இருக்கிறது. வெயில் அவ்வளவாக இல்லை. இருந்தபோதும் தேர்தல் பிரச்சாரத்தின் கலகலப்பும் வண்ணமும் பெங்களூரில் சுத்தமாக காணப்படவில்லை. சத்தம் மிகுந்த தேர்தலைச் சந்தித்துவரும் தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்திலிருந்து நுழைபவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது கர்நாடக சட்டமன்றத் தேர்தல். ஆனால், மும்முனைப் போட்டியைச் சந்திக்கும் இந்தத் தேர்தல் அகில இந்திய காங்கிரஸ், பாரதீய ஜனதாக் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்குமே மிக முக்கியமான ஒன்று. கிட்டத்தட்ட வாழ்வா, சாவா போராட்டம் என்றே சொல்லலாம். அகில இந்திய காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்தியாவில் பஞ்சாபிற்கு அடுத்தபடியாக காங்கிரசின் கையில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகம்தான். ஆகவே, இந்த மாநிலத்தை தக்கவைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அக்கட்சி.

    இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி,கர்நாடக மாநிலத் தேர்தலை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், 2019ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இதனைப் பார்ப்பதுதான். இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் அகில இந்திய அளவில் தான் ஒரு பலவீனமாக கட்சியாக பார்க்கப்படக்கூடுமோ என்ற எண்ணம் அக்கட்சியிடம் இருக்கிறது.


    மதச்சார்பற்ற ஜனதா தளத்தைப் பொருத்தவரை நிஜமாகவே இந்தத் தேர்தல் ஒரு வாழ்வா - சாவா போராட்டம்தான். 2008ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 28 இடங்களைப் பிடித்த அக்கட்சி 2013ஆம் ஆண்டுத் தேர்தலில் 40 இடங்களைப் பிடித்ததோடு, தான் பெற்ற வாக்குகளின் சதவீதத்தையும் 18.96லிருந்து 20.09ஆக உயர்த்தியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 25 இடங்களில் 2 இடங்களே கிடைத்தன. பெற்ற வாக்குகளின் சதவீதமும் 11ஆகக் குறைந்தது.

    இதற்கிடையில் அக்கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றிபெற்ற 7 எம்எல்ஏக்கள் காங்கிரசிலும் இருவர் பாரதீய ஜனதாக் கட்சியிலும் சேர்ந்தனர். இது, அக்கட்சிக்கும் தலைமைக்கும் மிகப் பலவீனமான தோற்றத்தைக் கொடுத்திருக்கிறது. ஆகவே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டாலும் அடுத்த முதல்வராக யார் ஆவது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக இருவெடுக்க விரும்புகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவரான எச்.டி. குமாரசாமி.

    தற்போதய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவே 14 வருடங்களுக்கு முன்பாக ஜனதா தளத்திலிருந்து வெளியேறிவர் என்பதால், தனிப்பட்ட முறையிலும் அவரோடு கணக்குத் தீர்க்க நினைக்கிறார் குமாரசாமி.

    கர்நாடக மாநில சட்டமன்றத்தில் 224 இடங்கள் இருக்கின்றன. மே 12ஆம் தேதியன்று 223 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஜெயநகர் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரான பி.என். விஜயகுமார் உயிரிழந்துவிட்டதால் அந்தத் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.தற்போதைய சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 119 இடங்களை வைத்திருக்கிறது. பா.ஜ.க. 42 இடங்களையும் மதச் சார்பற்ற ஜனதா தளம் 29 (40 இடங்களில் வெற்றிபெற்றாலும் பல உறுப்பினர்கள் பின்னர் வெளியேறினர்) இடங்களையும் வைத்திருக்கின்றன. 54.46 சதவீத வாக்குகளை இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றது.
    இந்த முறை காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் மேல்கோட்டை தொகுதியைத் தவிர பிற தொகுதிகள் அனைத்திலும் போட்டியிடுகிறது. மேல்கோட்டையப் பொறுத்தவரை, அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுவராஜ் அபியான் அமைப்பின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அந்தத் தொகுதியில் போட்டியிடவில்லை. இந்த் தொகுதியில் கர்நாடக மாநில விவசாய சங்கத் தலைவரான கே.எஸ். புட்டன்னய்யாவின் மகன் தர்ஷன் புட்டன்னய்யா போட்டியிடுகிறார்.

    பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுத்தவரை 224 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மதச் சார்பற்ற ஜனதாக் கட்சிக் கூட்டணியைப் பொறுத்தவரை 221 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வரான 69 வயதாகும் எஸ். சித்தராமைய்யா கடந்த ஐந்தாண்டு காலத்தில் தான் செய்த சாதனைகளை நம்பி களத்தில் மீண்டும் நிற்கிறார். கர்நாடகத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக முதல்வராக நீடித்தவர் என்பதோடு, பெரிய ஊழல் புகார்கள் ஏதும் இவரது அரசு மீது இல்லாததும் இவருக்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது.

    முதல்வராக இருந்த ஐந்தாண்டு காலத்தில் கட்சிக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பெரும் சவால்களைச் சந்தித்த சித்தராமைய்யா, அவற்றையெல்லாம் வெற்றிகரமாக கடந்துவந்திருக்கிறார். தற்போதும் மாநில காங்கிரசிற்குள் சித்தராமைய்யா மீது பலருக்கும் எதிர்ப்புணர்வு இருக்கிறது என்றாலும் உள்ளடி வேலைகளைப் பார்க்கும் அளவுக்கு அந்த எதிர்ப்பு போகாது என்று நம்பப்படுகிறது. எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, அரசு மீது சிறு சிறு ஊழல் புகார்களை முன்வைக்கிறார்கள். சித்தராமைய்யாவின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கடிகாரம் குறித்த விவகாரத்தை எல்லா மேடைகளிலும் பேசிவருகிறது பா.ஜ.க. அதேபோல, தன் மகன் யதீந்திராவைப் போட்டியிட வைத்ததன் மூலம் வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறார் என்ற விமர்சனமும் அவர் மீது முன்வைக்கப்படுகிறது. அனால், இந்த எதிர்ப்புகளையெல்லாம் அனாயாசமாக கடந்து, பா.ஜ.கவை எதிர்கொள்கிறார் சித்தராமைய்யா.

    லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவித்தது, கர்நாடக மாநில கொடியை அறிமுகப்படுத்தியது, 15வது நிதி கமிஷன் விதிமுறைகள் மாற்றப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்தது ஆகியவை அவருக்கு வேறு ஒரு பரிமாணத்தை அளித்திருக்கின்றன.



    "அப்படியெல்லாம் இல்லை. கர்நாடக கொடி நீண்ட காலமாகவே இருக்கிறது. அதை இவர் ஒன்றும் அறிமுகப்படுத்தவில்லை. அந்தக் கொடியை யாருமே எதிர்க்கவும் இல்லை. இதெயெல்லாம் சாதனையாக சொல்ல முடியுமா? இதற்கெல்லாம் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள்" என்று பிபிசியிடம் கூறினார் பா.ஜ.கவின் சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு.

    கடந்த ஐந்தாண்டுகளில் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அதை மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்போம் என்கிறார் அவர். பாரதீய ஜனதாக் கட்சியைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது ஒரு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்தில் எழுந்த ஊழல் புகார்கள், சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ரெட்டி சகோதரர்களுடனான நெருக்கம் ஆகியவை தேசிய அளவில் அவருக்கு ஒரு எதிர்மறையான பிம்பத்தையே தந்திருக்கும் நிலையில் சித்தராமைய்யாவை எதிர்க்க எடியூரப்பா சரியான தலைவரா என்ற எண்ணம் தொண்டர்களுக்கே இருக்கிறது.

    பெங்களூரில் உள்ள பா.ஜ.க. தொண்டர்களிடம் பேசினால், சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு "எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி வராது. தொங்கு சட்டமன்றம்தான்" என்கிறார்கள். பா.ஜ.க. வெற்றிபெறும் என்று சொல்வதற்குப் பதிலாக இப்படி ஒரு மனப்போக்கு ஏற்பட்டிருப்பதே அக்கட்சியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், கட்சித் தலைமை கர்நாடகத் தேர்தலை மிகத் தீவிரமாக அணுகிவருகிறது. பிரதமர் மோதியும் கட்சித் தலைவர் அமித் ஷாவும் பல முறை கர்நாடகாவிற்கு வந்து பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பொதுக்கூட்டங்களில் எல்லாம் முந்தைய பா.ஜ.க.அரசின் சாதனைகளைச் சொல்வதற்குப் பதிலாக ராகுல் காந்தி மீதான விமர்சனம் மிகத் தீவிரமாக முன்வைக்கப்படுகிறது. இதுவே இந்தத் தேர்தலை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்க வைக்கிறது. தவிர, இந்தத் தேர்தல் சித்தராமைய்யாவுக்கும் எடியூரப்பாவுக்கும் எச்.டி. குமாரசாமிக்கும் இடையிலான மோதலாகவோ, இவர்களின் கட்சிக்கு இடையிலான போட்டியாகவோ பார்க்கப்படாமல், சித்தராமைய்யாவுக்கும் பிரதமர் மோதிக்கும் இடையிலான மோதலாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மோதிக்கு பதில் சொல்வதன் மூலமும், தாக்குவதன் மூலமும் இந்தத் தோற்றம் மறையாமல் பார்த்துக்கொள்கிறார் சித்தராமைய்யா.

    மேலும், சுரங்க அதிபர் ஜனார்த்தனன் ரெட்டியின் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 12 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதும் 'ஊழலுக்கு எதிரான கட்சி' என்ற அக்கட்சியின் முழக்கத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது. ஆனால், பல்வேறு இலவசத் திட்டங்களுடன் வெளியிடப்பட்ட பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பயிர்க்கடன் ரத்து, தாலிக்குத் தங்கம், நிதியுதவி, கல்லூரி மாணவர்களுக்கு லேப் - டாப், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு ஸ்மார்ட் போன் என இலவசங்களை வாரியிறைக்கிறது அந்த அறிக்கை. ஆனால், அறிக்கையில் உள்ள பல அம்சங்கள் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டவைதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான பரமேஸ்வரா. "அன்னபூரணா கேண்டீன் என்ற பெயரில் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படும் என்கிறார்கள். ஏற்கனவே இந்திரா கேண்டீன் இருக்கிறதே?" என்கிறார் அவர். இருந்தபோதும் கடலோரப் பகுதிகளில் பா.ஜ.கவின் செல்வாக்கு தொடர்ந்து நீடிக்கிறது.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் சில இடங்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்தத் தேர்தலில் மூன்றாவது அணியாகப் பார்க்கப்படுவதே அக்கட்சியின் மிகப் பெரிய பலவீனம். பா.ஜ.க., மஜத ஆகிய இரு கட்சியின் தொண்டர்களிடமும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏற்பட்டு, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பா.ஜ.க. ஆதரவாக ம.ஜ.தவும் அக்கட்சிக்கும் ஆதரவாக பா.ஜ.க.வும் பல தொகுதிகளில் செயல்படுவதாக வெளிப்படையாகவே பேச்சு இருக்கிறது.


    தவிர தேர்தல் பிரசாரத்தில் ம.ஜ.த. தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவை புகழ்ந்து பிரதமர் மோதி பேசியதும் அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்படுகிறது. இதையடுத்து, ராகுல்காந்தி ம.ஜ.த. மீது நேரடியாகவே குற்றம் சாட்டினார். "நீங்கள் மதச்சார்பற்ற ஜனதா தளமா அல்லது சங்கபரிவார் ஜனதா தளமா" என்பதைத் தெரிவிக்க வேண்டுமெனக் கூறினார். எச்.டி. குமாரசாமியைப் பொறுத்தவரை தான் மூன்றாவது அணியாக ஒதுக்கப்படுவதையோ, முதலமைச்சர் போட்டியாளராக பார்க்கப்படாமல் 'கிங் மேக்கராக' பார்க்கப்படுவதையோ ரசிக்கவில்லை. "தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால், கட்சிகளுடன் பேசுவேன்" என்று சில நாட்களுக்கு முன்பாக அவர் கூறியதே, அவரை பிரதான போட்டியாளர் என்ற நிலையிலிருந்து கீழிறக்கியது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று ஊடகங்களிடம் பேசிய அவர், 'நான் கிங் மேக்கரல்ல. கிங்' என்றார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள மே 15ஆம் தேதி கர்நாடகத்தின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அடுத்த ஆண்டில் இந்தியா செல்லக்கூடிய திசையையும் கோடிகாட்டக்கூடும். தற்போது கர்நாடகாவில் உத்தேசமாக 4.97 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 52 லட்சம். பெண் வாக்காளர்கள் சுமார் 2 கோடியே 44 லட்சம். 56,696 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குகள் பதிவுசெய்யப்படவுள்ளன. சுமார் 3,56,552 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad