Header Ads

  • சற்று முன்

    தூத்துக்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.


    கோவில்பட்டியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவில்பட்டி மக்கள் கடலை மிட்டாயைப் போல் இனிமையானவர்கள் என தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழகம் தான் உணவு தானிய உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறிய அவர், இரவு பகல் பாராமல் உழைக்கும் விவசாயிகளுக்குத் தேவையான நீர் வழங்குவதே தமிழக அரசின் முதல் கடமை என்றார்.

    குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய முதலமைச்சர், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் கோவில்பட்டியில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப நாளொன்றுக்கு 100 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தார். வீதியோரக் குழாயில் வீணாக நீர் வடிந்தால் நொடி கூட தாமதிக்காமல் அதை நிறுத்துமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற தமிழக அரசு ஒருபோதும் தயங்காது என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஏரி அமைத்த மன்னனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்த குட்டிகதையைக் கூறி, அதை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களோடு ஒப்பிட்டு உரையாற்றினார்.

    குடிமராமத்து திட்டத்துக்கு விவசாயிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று அத்திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டார். 1,511 ஏரிகள் தூர்வாரப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய முதலமைச்சர், மானிய விலையில் ஸ்கூட்டி பெற விண்ணப்பித்த சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு ஓரிரு ஆண்டில் மானியம் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad