Header Ads

 • சற்று முன்

  தமிழகத்தில் கல்வி புரட்சியினை அரசு ஏற்பபடுத்தி வருகிறது- அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ


  கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில் நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கான உண்டுஉறைவிட பயிற்சி முகாம் இன்று முதல் 21நாள்கள் நடைபெறுகிறது.இதில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட 7மாவட்டங்களை சேர்ந்த 350 ஆங்கில வழி கல்வி பயின்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.வீரப்பன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

  பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவிழாப் பேருரையில் பேசியதாவது:

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால், அனைவரும் கல்வி அறிவு பெற்று இருக்க வேண்டும் என்ற உயர்ந்து நோக்கத்தோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார்கள். இருந்தாலும், மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர்போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப காவல் தெய்வமாக இருந்து தமிழகத்தை பாதுகாத்து வந்தார்கள். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் செயல்படும், முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்கள். 

  விலையில்லா புத்தகம், குறிப்பேடுகள், இலவச பேருந்து பயண அட்டை, சீருடை, காலணிகள், வண்ண பென்சில்கள், சிலேட்டுகள், உலகப்படம், விலையில்லா மிதிவண்டி என பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத கல்வி புரட்சியினை அரசு தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் ஏற்படும் மன உலைச்சலை போக்கிடும் வகையில், தமிழக அரசு கிரேடு முறையை அமல்படுத்தியது.

   மேலும், பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர்கள் பெறும் மதிப்பெண்களை 10 நிமிடத்தில் அவர்களது அலைபேசி வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு நீட் தேர்வு அறிவித்திருந்த போது மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் சிரமங்களை அறிந்து, மாண்புமிகு அம்மா அவர்கள் ஒருவருட கால அவகாசம் கேட்டார்கள். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த வருடம் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. 

  இவ்வருடம் நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்கிடும் வகையிலும், சிறந்த பயிற்சி அளித்திடும் வகையிலும், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்துவகையான போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு ஏதுவாக தமிழகத்தில் ஒன்றிய அளவில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

  கோவில்பட்டி, நேசனல் பொறியியல் கல்லூரியில் 350 மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில வழியில் போட்டித் தேர்வு மற்றும் திறன் பயிற்சிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. 2018 ஏப்ரல் 9ம் தேதி முதல் ஒரு மாதகாலத்திற்கு பயிற்சிகள் திட்டமிட்ட முறையில் இணையதளம் மற்றும் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. இதனை மாணவ, மாணவயிர்கள் நன்கு முறையில் பயன்படுத்திக் கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்றார். 

  இவ்விழாவில் இயக்குநர், தொடக்கக் கல்வித்துறை முனைவர். கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மனோகரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா, கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாச்சலம், கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் முனைவர்.சண்முகவேல்,  நகராட்சி ஆணையர், அச்சையா, வட்டாட்சியர் ஜாண்சன் தேவசகாயம், மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன், ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

  கருத்துகள் இல்லை