செங்கல்பட்டு அருகே சாலை விபத்து ! பெண் பலி ! உறவினர்கள் சாலை மறியல் !
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே சாலைவிபத்தில் கணவன் கண்முன்னாலேயே மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மறியலில் ஈடுபட்ட உறவினர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே நடைபெற்ற தடியடி-கல்வீச்சில் மாவட்ட எஸ்.பி.படுகாயமடைந்தார்.செங்கல்பட்டு அடுத்த மஹேந்திரா சிட்டி அருகே இன்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேரமனூரை சேர்ந்த தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று தம்பதி சென்ற வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது. இந்த விபத்தில் கணவன் கண் முன்னேயே மனைவி லாவண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த லாவண்யாவின் உறவினர்கள் இந்த விபத்தை கண்டித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவத்தை கேள்விபட்ட காவல்துறையினர் காயமடைந்த உயிரிழந்த லாவண்யாவின் சடலத்தையும், அவரது கணவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஆனால் லாவண்யாவின் உறவினர்கள் மறியலை கைவிடுவதாக இல்லை என்று தெரிவித்துவிட்டதால், சம்பவ இடத்துக்கு நேரில் வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்ஹிதிமணி போலீஸ் தடியடிக்கு உத்தரவிட்டார்.இதனால் ஆவேசமடைந்த மக்கள் தடியடி நடத்திய காவல்துறையினர் மீது கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்ஹிதிமணி மீது கல் விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.கல் வீச்சில் சம்பந்தப்பட்ட பலரை கைது செய்து செங்கல்பட்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை