கோவில்பட்டி அருகே மில் தொழிலாளி கொலையில் கப்பல் மாலுமி கைது!!!

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவருடைய மகன் அருண்பாண்டி(வயது 24). இவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 17-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெம்பூர் நாற்கர சாலை பஸ்நிறுத்தம் அருகில் கழுத்தில் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தேனி மாவட்டம் பொன்னுகவுண்டம்பட்டியைச் சேர்ந்த மன்மதன் மகன் நீல விக்னேஷ்(30), அருண்பாண்டியை கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.கைதான நீல விக்னேஷ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-தான் கப்பலில் மாலுமியாக வேலை செய்து வருகிறேன். அருண்பாண்டி, என்னுடைய தங்கை உறவுமுறையான பெரியப்பா மகளை காதலித்து வந்தார். இதற்கிடையே என்னுடைய தங்கைக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவருக்கு மே மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிலையில் அருண்பாண்டி என்னுடைய தங்கையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக என்னுடைய சகோதரர் ராம்குமாரிடம் அவதூறாக பேசி பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் அந்த படங்களை பெறுவதற்காக நான், அருண்பாண்டிக்கு 3 முறை தலா ரூ.25 ஆயிரம் வழங்கினேன். ஆனாலும் அவர் அந்த படங்களை திருப்பி தராமல் தங்கையின் திருமணத்தில் இடையூறு செய்வதாக மிரட்டி வந்தார்.இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அருண்பாண்டி என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், அந்த படங்களை பெறுவதற்கு வெம்பூர் நாற்கர சாலையில் உள்ள கேன்டீனுக்கு இரவில் தனியாக வருமாறு கூறினார். அதன்படி நானும் காரில் அங்கு தனியாக சென்றேன். அப்போது அங்குள்ள காட்டுபகுதியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அருண்பாண்டி கொண்டு வந்த கத்தியால் அவரை கழுத்தில் குத்தி, காரை ஏற்றி கொலை செய்து விட்டு, பின்னர் அருண்பாண்டியின் மடிக்கணினியை எடுத்து அதில் இருந்த அனைத்து தகவல்களையும் அழித்ததாக தெரிவித்துள்ளார்.கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் அருண்பாண்டியின் மடிக்கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை