• சற்று முன்

    அரசியல் நிலைபாட்டை வரும் 31ஆம் தேதி அறிவிப்பார் ரஜினி


    அரசியல் பிரவேசம் குறித்து வரும் 31ந் தேதி தெரிவிக்க உள்ளதாக ரசிகர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது கட்டமாக இன்று முதல் தனது ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து காலை முதலே ரஜினியுடன் இணைந்து புகைப்படம் எடுக்க ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் கடும் சோதனைகளுக்கு பிறகு ராகவேந்திரா மண்டபத்திற்குள்  அனுமதிக்கப்பட்டனர். சரியாக காலை 8:30 மணி அளவில் மண்டபத்திற்குள் வந்த ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்பரித்தனர்.



    பைரவி படத்தின் மூலம் ரஜினியை கதாநாயகனாக அறிமுகம் செய்த தயாரிப்பாளர் கலைஞானம், முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் மேடையில் ரஜினியுடன் அமர்ந்திருந்தனர். இருவரும் ரஜினியின் வெற்றிக்கான காரணத்தை எடுத்துக்கூறினர்.
    பின்னர் பேசிய ரஜினி, தானே விரும்பாத நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி கலைஞானம் கதாநாயகனாக்கியதாக கூறினார். இதே போல் ரஜினி ஸ்டைல் என்கிற ஒன்றை உருவாக்கியது இயக்குனர் மகேந்திரன் தான் என்றும் ரஜினி தெரிவித்தார்.
    தொடர்ந்து பேசிய ரஜினி, போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அரசியல் பிரவேசம் குறித்து தான் கூறியதாகவும், போர் என்று கூறியது தேர்தலைத்தான் என்றும் தெரிவித்தார். தற்போது தேர்தல் எதுவும் வராத நிலையில் தனது அரசியல் பிரவேசம் பெரிதுபடுத்தப்படுவதாக ரஜினி கூறினார். எனவே வரும் 31ந் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    சமூகவலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகளை ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும், நேர்மறை கருத்துகளை மட்டுமே ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad