• சற்று முன்

    ஒக்கி புயல் நிவாரண பணிகளை துரிதமாக செயல்பட முதல்வர் உத்தரவு





    ஒக்கி புயல் காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக மாவட்ட ஆட்சியர்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களை உரிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு சென்று, நிவாரண முகாம்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கிடவும் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும், போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டி.கே.இராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு குமார் ஜெயந்த், நெல்லை மாவட்டத்திற்கு ராஜேந்திரகுமார், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பி.சந்தரமோகன் ஆகிய கண்காணிப்பு அலுவலர்களையும், அந்தந்த மாவட்ட அமைச்சர்களையும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரையும் உடனடியாக சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.



    கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 70 நபர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக்குழுவும், 60 நபர்கள் அடங்கிய இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களும் விரைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பலத்த காற்று வீசியதால் மரங்கள் முறிந்து மின் கம்பங்களின் மீது விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட மின் தடையினை சீரமைக்கும் பணிக்காக, மதுரை மின் பகிர்மான அலகிலிருந்து பணியாளர்கள் தகுந்த உபகரணங்களுடன் விரைந்துள்ளனர் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நிவாரண மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளதால், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad