விரக்தியில் அணி மாறும்.. தினகரன் ஆதரவாளர்கள் காலியாகும் தினகரன் கூடாரம்
சென்னை: ஆட்சியும் இல்லை, கட்சியும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் டிடிவி தினகரன் கூடாரம் காலியாகி வருகிறது. இதனால் பல மாஜி எம்எல்ஏக்கள், மற்றும் எம்.பிக்கள், அதிமுக பக்கம் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதை சொன்னாலும் செய்ய தயாராக இருந்தார் ஓ.பி.எஸ். ஆனால் முதல்வர் பதவி மீது கொண்ட பெரு மோகத்தால், அதை அடைய சசிகலா குறி வைக்க ஆரம்பித்தது வம்பு. ஓபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் திடீரென பிரிந்து செல்ல, சசிகலா சிறைக்கு செல்ல நிலைமை தலைகீழானது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று முதல்வராகிவிடலாம் என தினகரன் காய் நகர்த்த, எடப்பாடி பழனிச்சாமி, தினகரனுடன் மோதிக்கொள்ள, இப்படியாக அங்கு இரு கோஷ்டி உருவானது
.
பேராசை பெருநஷ்டம் சசிகலா முதல்வர் ஆசையால், ஓபிஎஸ் அணியினர் என்று ஒன்று பிறந்தது. தினகரனின் முதல்வர் ஆசையால் எடப்பாடி அணி என்று ஒன்று பிறந்தது. பாதிக்கப்பட்ட எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்ததால் இப்போது சசிகலா-தினகரன் அணி பாடு தகிடுதத்தோம் ஆகிவிட்டது.
தகுதி நீக்கம்
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். தேர்தலுக்காக ஏகப்பட்ட செலவுகளை செய்த அவர்களால் இப்போது எம்எல்ஏ என்று சொந்த காரில் கூட எழுதிக்கொள்ள முடியாத நிலை. எந்த சலுகையும் அவர்களுக்கு கிடையாது.
கட்சி, ஆட்சி இப்படி ஆட்சி அதிகாரத்தை தவறவிட்ட அவர்களை, கட்சி நமக்கு வந்துவிடும் என்று கூறி தேற்றி வந்தார் தினகரன். ஆனால் இப்போது கட்சியும் எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கே போய்விட்டது. இரட்டை இலை சின்னம், அதிமுக பெயர், கொடி ஆகியவற்றை தினகரன் அணியால் பயன்படுத்தவே முடியாது. முன்பாவது அதிமுக அம்மா அணி என கூற முடிந்தது. இப்போது அதுவும் முடியாது.
கட்சி தாவல்
தன்னிடமுள்ள பண பலத்தை வைத்து தனிக்கட்சி தொடங்க தினகரனால் முடியும். ஆனால் அந்த கட்சிக்கு போனால் கட்சி தாவல் தடை சட்டத்தில் 18 மாஜி எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை பாயலாம். இதனால் அடுத்த தேர்தலிலும் அவர்களால் போட்டியிட கூட முடியாத நிலை ஏற்படும். கட்சி, ஆட்சி என இரண்டிலும் ஒன்றுமில்லாமல் போனதால் அதிருப்தியிலுள்ள 18 மாஜி எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் எடப்பாடி அணிக்கே திரும்ப யோசிக்கிறார்களாம்.
எம்.பி.கள் அணி மாற வாய்ப்பு
அதேபோல தினகரன் ஆதரவு எம்பிக்களும் அணி மாற யோசிக்கிறார்களாம். இரட்டை இலை சின்னம் எங்கே உள்ளதோ அங்கேயே நாங்கள் செல்வோம் என கூறி மக்களை அமைதிப்படுத்திவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். எனவே ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள். இதனால் தினகரன் வட்டம் சுறுங்கிப்போக வாய்ப்புள்ளதால் நடுக்கத்தில் உள்ளது சசிகலா குடும்பம்.
கருத்துகள் இல்லை