Header Ads

  • சற்று முன்

    ராஜ்பவனை இன்னொரு தலைமைச் செயலகமாக்கும் முயற்சி – ஸ்டாலின்



    தமிழகத்தில் ஆளுநர் மாளிகையை இன்னொரு தலைமைச் செயலகமாக்கி இரட்டை ஆட்சி நடத்தும் நோக்கம், நாளடைவில் ஆளுநர் மாளிகையின் ஒற்றை ஆட்சிக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் நடைபெறும் நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டு, அதிகாரிகளை அழைத்து நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துவதாக தமது அறிக்கையில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இத்தகைய ஆலோசனைகள் தொடரும் என ஆளுநர் கூறும் நிலையில், தங்களின் அதிகாரத்தில் எப்படி தலையிடலாம் எனக் கேட்கவேண்டிய முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆளுநருக்கு வெண்சாமரம் சுழற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்விளைவாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்துடைய ஆலோசகராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.ராஜகோபாலை, தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமித்து, மாநில அரசுப் பணிக்குத் திரும்பச் செய்திருப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து, ஆளுநர்மாளிகையான ராஜ்பவனை இன்னொரு தலைமைச் செயலகமாக உருவாக்கி, இரட்டையாட்சி நடத்தும் நோக்கமே ராஜகோபால் நியமனத்தில் வெளிப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளடைவில் இரட்டையாட்சி என்பது ஆளுநர் மாளிகையின் ஒற்றையாட்சியாக மாற்றப்படும் திட்டம் உள்ளதோ என்ற அச்சமும் ஐயமும் ஏற்பட்டுள்ளதாகக் ஸ்டாலின் கூறியுள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad