போயஸ் கார்டனில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பணியில் ஈடுபட்டுள்ளனர்
ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, போயஸ் தோட்டம் பகுதியிலும், வருமான வரி புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போயஸ் தோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் 200 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் வசிப்பவர்கள் தவிர மற்ற அனைவருக்கும், அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேபோல, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் நடைபெறக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அலுவலகத்தின் 2 வாயில்களிலும் ஆயுதப்படையைச் சேர்ந்த 40 போலீசார் துப்பாக்கிகளுடன், சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் இன்று பிற்பகலில் விசாணைக்கு வருவார் என சொல்லப்படுகிறது.
கருத்துகள் இல்லை