உதிந்த இலையை தொப்பி தாங்குமா
சென்னை: இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கே ஒதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது தினகரனுக்கு தொப்பி மட்டுமே விஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக பிளவுப்பட்டு தனித்தனியாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலின்போது இந்த இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரியதால் அந்த சின்னத்தையும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதனால் அதிமுக அம்மா அணி என்றும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் செயல்பட்டு வந்தனர். தேர்தலிலும் தொப்பி மற்றும் இரட்டை விளக்கு சின்னமாக வைத்துக் கொண்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினகரன் தொப்பி அணிந்து கொண்டு ஆர்.கே.நகர் முழுவதும் பிரசாரம் செய்தார். எனினும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக ஓபிஎஸ் அணியினரும், எடப்பாடி அணியினரும் தேர்தல் ஆணையத்தை நாடி பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். சுமார் 8 மாதங்களாக இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வந்தது. இதனிடையே அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டது. இதனால் தனித்தனியாக தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்களை வாபஸ் பெற்றுக் கொண்டு இரு அணிகளும் சேர்ந்தே மனுக்களை தாக்கல் செய்தனர். தற்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.தினகரனின் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் தினகரனைப் பார்த்து தொப்பி தொப்பி என ஓபிஎஸ் எடப்பாடி கோஷ்டியினர் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை