போராடும் செவிலியர்களை அடைத்து கழிவறையைப் பூட்டி வைப்பதா?- திமுக வேடிக்கை பார்க்காது: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை டிஎம்எஸ் வளாகத்தில் அடைத்து வைத்து, கழிவறையையும் பூட்டி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்ந்தால் திமுக வேடிக்கை பார்க்காது என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. எச்சரிக்கை விடுத்தார்.
குறைந்த பட்சமாக ரூ.7000 மட்டுமே ஊதியம் வழங்குவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் புறக்கணிப்பதாக கூறி, ஊதிய உயர்வை, நிரந்த பணி ஆணை வழங்கக் கோரி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இரண்டாவது நாளாக செவிலியர்கள் போராடி வருகின்றனர். நேற்று டிஎம்எஸ் வளாகத்திற்கு போராட்டத்திற்கு வந்த செவிலியர்களை போலீஸார் டிஎம்எஸ் வளாகத்தின் உள்ளே அடைத்து வைத்து, இயற்கை உபாதைகளுக்கு கூட செல்ல விடாமல் கழிவறையைப் பூட்டி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
செய்தியாளர்களை கூட உள்ளே அனுமதிக்க போலீஸார் மறுக்கின்றனர். 3000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளே அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை கூட நிறைவேற்ற விடாமல் தங்கள் கோரிக்கைகளை செய்தியாளர்களிடம் கூற விடாமல் போலீஸார் மறுத்து வருகின்றனர். போராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித்தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். திமுக ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் போராட்டம் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டிஎம்எஸ் வளாகத்திற்கு வந்து செவிலியர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கூறியது:
“நேற்று காலை முதல், தமிழகத்தில் உள்ள செவிலியர்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். வெறும் ரூ.7000-10000 வரைதான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு 11,000 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இதுநாள் வரை அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை, உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும், அரசு செவி சாய்க்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ரூ.34000 சம்பளம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை பிறப்பித்து ஒரு வருட காலம் ஆன பின்பும், இதுவரை அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் அவரை காப்பாற்றிக்கொள்ள மட்டுமே டெல்லிக்கு சென்று கொண்டிருக்கிறாரே தவிர, போராடிக் கொண்டிருக்கும் செவிலியர்களின் கோரிக்கையை கேட்க அவருக்கு நேரமில்லை.
ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாதது, இன்று நடந்து கொண்டிருக்கிறது. போராடுபவர்களை மீடியாக்கள் கூட சந்திக்க விடாமல் தடுக்கும் அவலம் இங்கு மட்டும்தான் நடக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். துன்புறுத்தப்படும் செவிலியர்களை சந்திக்க ஸ்டாலின் எங்களை அனுப்பிவைத்தார். கழிவறைகளுக்கு பூட்டு போட்டதால், இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட இடம் இல்லாமல் செவிலியர்கள் கஷ்டப்படுகின்றனர். கழிப்பறைகளை திறந்து விடுமாறு காவல்துறையிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இதற்கு பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமுக அதைக் கண்டு அமைதியாக இருக்காது. தமிழக அரசு இன்னும் இரண்டொரு நாளில் இந்த போராட்டத்திற்கு தீர்வு காணவில்லை என்றால், திமுக இதை புதிய முறையில் கையாளும்.”
இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை