• சற்று முன்

    அதிமுகவில் மதுசூதனன், கோகுல இந்திரா உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனு


    ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் போட்டியிட மதுசூதனனுக்கு எதிராக போட்டி வலுக்கிறது. பாலகங்கா, கோகுல இந்திரா, ஆதிராஜாராம் உட்பட 24 பேர் விருப்ப மனுவை வாங்கிச்சென்றனர்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், எடப்பாடி அணி சார்பில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்தானது.

    இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எடப்பாடி அணியிலிருந்து தினகரன் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ் அணியும் எடப்பாடி அணியும் இணைந்தது. பின்னர் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், எடப்பாடி அணிக்கு கிடைத்தது. அதன் பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.21-ம் தேதி நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக தனது முந்தைய வேட்பாளர் மருதுகணேஷையே நிறுத்துவதாக அறிவித்தது. அதே போல் அதிமுகவிலும் மீண்டும் மதுசூதனன் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் மதுசூதனனை நிறுத்த எதிர்ப்பு கிளம்பியதால், வேட்பாளரை தேர்வு செய்ய நேற்றுக் கூட்டப்பட்ட அதிமுக கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எதிர் தரப்பில் கோகுல இந்திரா உள்ளிட்டவர்களை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மதுசூதனன் போட்டியிட்டால் வேலை செய்ய முடியாது என சில அமைச்சர்களே மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து விருப்ப மனு பெற்று பின்னர் ஆட்சிமன்றக் கூட்டத்தில் விவாதித்து வேட்பாளரை தேர்வு செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. இன்று விருப்பமனுவை பெற்று நாளை (29/11) ஆட்சிமன்றக்குழு கூடி வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளனர். இந்நிலையில் கோகுல இந்திரா உள்ளிட்ட ஒரு சிலர் விருப்பமனு பெற வாய்ப்பு என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விருப்ப மனு வாங்க போட்டா போட்டி நிலவுகிறது. முக்கிய விஐபிக்கள் உட்பட சாதாரண நிர்வாகிகள் வரை விருப்பமனுவை வாங்கிச் சென்றனர்.

    மதுசூதனன், கோகுல இந்திரா, பாலகங்கா, ஆதிராஜாராம், தமிழ்மகன் உசேன், நூர்ஜஹான் பேகம், அஞ்சலை, (மதுசூதனன் உடன் இருக்கும்) ராஜேஷ் உள்ளிட்ட 24 பேர் விருப்ப மனுவை வாங்கிச் சென்றனர். ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்பதில் மதுசூதனனுடன் 23 பேர் போட்டியிடுவதால் அதிமுகவுக்குள் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad