திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தால் முதலில் இருவர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இரண்டு பெண்கள் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது
திருவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் இந்த இறால் பதப்படுத்தும் ஆலையில், இறால்களைப் பதப்படுத்தி வைப்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக ஆலையில் உள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு அமோனியா வாயு வெளியேறியது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்த அங்கிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த விபத்தில் நேற்றைய தினமே இருவர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இந்தச் சூழலில் தான் இன்று மேலும் இரு இளம்பெண்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்றும், வாயு கசிவு ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விபத்து தொடர்பாகப் பல தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகள் மற்ற சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அமோனியா கசிவு விபத்து தொடர்பாக இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு வரும் வரை ஆலை இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்குப் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அரசு தரப்பில் நிவாரணமாக ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை