போதைப்பொருள் புழக்கம் பற்றி தைரியமாக தகவல் கொடுங்கள் என்று கல்லூரி மாணவ மாணவியருக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்
போதைப்பொருள் புழக்கம் பற்றி தைரியமாக தகவல் கொடுங்கள் என்று கல்லூரி மாணவ மாணவியருக்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இந்த வேண்டுகோளை விடுத்த அவர், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகளும் சொத்துக்களும் முடக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
முதலில் போதைப்பொருள் நடமாட்டம் ஒன்று ரகசியமானது அல்ல. அதை உட்கொள்பவர்கள் போலீசுக்கு பயந்தெல்லாம் வீட்டிலேயோ ரகசிய இடத்திலேயோ முடங்கி கிடப்பதில்லை.
வீதிகளில் தாறுமாறாக சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பல இடங்களில் மக்களிடம் வம்பு சண்டைகளில் இறங்குகிறார்கள். கஞ்சாவை வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ உடனே கைது செய்யும் போலீஸ், கஞ்சா போதையில் இருக்கிறார் என்பது தெரிந்திருந்தும் எத்தனை பேரை கைது செய்திருக்கிறது?
ஒரு சாவு ஊர்வலத்தில் கூட நாலைந்து கஞ்சா குடிக்கள் அக்கப்போர் செய்யாமல் இருப்பதில்லை. கையில் சிக்கும் போதை பார்ட்டிகளை தீவிரமாக விசாரித்தாலே அவர்களுக்கு யார் யார் விற்பனை செய்கிறார்கள் என்பது சுலபத்தில் தெரிந்துவிடும். அந்த விற்பனையாளர்களை பிடித்தால் யார் யாருக்கு எவ்வளவு மாமூல் கொடுத்து விட்டு தொழிலை சுதந்திரமாக நடத்துகிறார்கள் என்பது அம்பலத்துக்கு வந்து விடும்.
இன்னும் புரியிற மாதிரி சொல்லப்போனால், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மாமுல் பார்ட்டிகளுக்கு இடையே, வீட்டம்ம மணிகளால் 'பிழைக்கத் தெரியாதவன்' என்று நக்கலாக பெயர் சூட்டப்பட்ட நேர்மையான போலீஸ்காரர்களும் இருப்பார்கள்.அவர்களை உயர் அதிகாரிகள் கௌரவமாக அழைத்து மனம் விட்டு பேச வைத்தாலே போதும், தகவல்களை கொட்டுவார்கள்.
திடீரென உணர்ச்சிவசப்பட்டு நடக்கும் குற்றங்களை தான் போலீசார் தடுக்க முடியாது. திட்டமிட்டு நடத்தப்படும் தொடர்ச்சியான குற்ற செயல்கள் ஒரு காவல் நிலையத்திற்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை என்பது காலங்காலமாக பேசப்படும் விஷயம் தானே.
இதற்குப் பிறகு இன்னொரு வழி இருக்கிறது. அது மிகவும் கடுமையானது. டிஜிபி நேரடி கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்படக்கூடிய தனிப் படைகளை உருவாக்கி தமிழக முழுவதும் வேட்டை நடத்தலாம்.
எங்கு அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்பது ஆதாரப்பூர்வமாக கண்டறியப்படுகிறதோ அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலிசாரை ஒட்டு மொத்தமாக பதவி இறக்கம் செய்து பணியிட மாற்றம் செய்யலாம்..இவர் வாங்கும் மாமூலால்தான் அந்த ஏரியாவில் போதைப்பொருளை ஒழிக்க முடியவில்லை என்பது தெரிய வந்தால், அவரை டிஸ்மிஸ் செய்துவிட்டு உள்ளே தள்ளலாம். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் பிறக்கும். அதை விடுத்து ஆயுதப்படைக்கு மாற்றம், காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பு போன்றவற்றிற்கெல்லாம் யாவரும் பயப்பட மாட்டார்கள். மேலே சொல்லப்பட்ட டிஜிபியின் தனிப்படைகள், எஸ்பி, டி.ஐ.ஜி, ஐ ஜி எந்த அதிகார மட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை இருக்க வேண்டும்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு உடந்தை விவகாரத்தில் ஒட்டுமொத்தமாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் போது மாமுல் வாங்காத போலீசாரும் அந்த நடவடிக்கையில் சிக்கலாமா என்ற கேள்வி எழலாம். மாமுல் வாங்குவது போன்ற சமூக விரோத செயலை ஒருவர் செய்யும் போது, அதற்கு உடந்தையாக இல்லாவிட்டாலும் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு உரியவர்களுக்கு தகவல் அனுப்பாததும் அரசுக்கு எதிரான குற்றம்தான்.
அதிகாரம் கையில் வைத்திருக்கும் போலீசாரே தகவல் தர முன் வராமல் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போகிறார்கள் என்று பேசப்படும் நிலையில், பொதுமக்களின் நிலை எப்படி இருக்கும்? நடவடிக்கை எடுக்க இன்னும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றை ஆலோசித்து முழு மனதோடு டிஜிபி செய்தால் போதைப் பொருள் நடமாட்டத்தை அடியோடு கட்டுப்படுத்தலாம், ஒரு கட்டத்தில் ஒழிக்கவும் செய்யலாம்.






கருத்துகள் இல்லை