• சற்று முன்

    திருச்சி முன்னாள் மேயர் சாரு பாலா தொண்டைமான் த வெ க வில் இணைவதாக தகவல்


    தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு முக்கிய சக்தியாக நிலைநிறுத்தி வரும் வேளையில், திருச்சி முன்னாள் மேயரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான் தவெகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.ஏற்கனவே காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், தற்போது தவெக-வை நோக்கி தன் அரசியல் பாதையை மாற்ற யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் தவெக தனது உட்கட்சி கட்டமைப்பைத் தீவிரமாக வலுவாக்கி வரும் நிலையில், குறிப்பாக டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் அதன் செயல்பாடுகள் உச்சத்தை தொட்டுள்ளன. அதிமுக, அமமுக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து வரும் முக்கிய நிர்வாகிகளை தவெக தன்பக்கம் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே திருச்சியில் இருந்து அதிமுகவின் முக்கிய முகங்கள் சிலர் தவெக பக்கம் சாய்ந்துவிட்ட சூழலில், தற்போது அமமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் சாருபாலா தொண்டைமானின் பெயரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

    தமிழக அரசியல் வட்டாரங்களில் “மேயர் சாருபாலா” என்று பரவலாக அறியப்படும் இவர், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரச பாரம்பரியமிக்க பின்னணியைக் கொண்டவர். கடந்த 2001 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் திருச்சி மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நற்பெயரையும், தனிச் செல்வாக்கையும் சம்பாதித்தவர். மத்திய தமிழகமான திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் தவெக-வின் அடித்தளத்தைப் பலப்படுத்த வலுவான ஒரு மூத்த தலைவரைத் தேடிக் கொண்டிருக்கும் தவெக தலைமைக்கு, சாருபாலாவின் நற்பெயரும், பாரம்பரிய மதிப்பும் ஒரு மிகப்பெரிய ‘மைலேஜ்’ ஆக அமையும் என கணிக்கப்படுகிறது.

    தற்போது டெல்டா மாவட்டங்களில் தவெகவின் உறுப்பினர் சேர்க்கை மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், சாருபாலா தொண்டைமானின் இந்த அரசியல் நகர்வு பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் தவெக-வில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேநேரம், சமீபத்தில் அவர் அதிமுக மூத்த தலைவர் அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படும் தகவல்களும் வெளியாகி இருப்பதால், அவர் தவெகவில் இணைந்தால் அவருக்கு கட்சியில் எந்தளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad