• சற்று முன்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கண்முன்னே, மனைவியை கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடத்தை மீதான சந்தேகத்தால் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரத்தை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

    நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே ராஜவல்லிபுரத்தை அடுத்த மேலபாலாமடை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவரும் சண்முகாபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த ஆறு மாதங்களாக பேச்சியம்மாள் பிரிந்து வாழ்ந்தார். குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, பாளையங்கோட்டையில் தங்கி வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களில் குழந்தைகளை பார்க்க செல்வது வழக்கம். இதற்கிடையே தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு சுதாகர் பலமுறை அழைத்தும் பேச்சியம்மாள் மறுத்துவிட்டார்.

    நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற பேச்சியம்மாள், சற்று நேரத்தில் வெளியே வந்தார். அவரை சுதாகர் தனது பைக்கில் பின் தொடர்ந்தார். வண்ணாரப்பேட்டையில் இருந்து பஸ்சில் ஏறி நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் பேச்சியம்மாள் இறங்கினார். அப்போது அங்கு வந்த சுதாகர், தன்னுடன் வருமாறு மனைவியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து ஓட்டம் பிடித்தனர்.

    கொலை செய்த சுதாகர் அங்கிருந்து தப்பி சென்று நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் இருந்த அரிவாள், பைக் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நெல்லை மேற்கு துணை கமிஷனர் விஜயகுமார், சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

    பஸ் நிலையத்தில் நடந்த இந்த கொலை குறித்து நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், "பஸ் நிலையத்தில் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பு இருந்து வருகிறது. தேர்தல் மற்றும் பிற பாதுகாப்பு பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் புறக்காவல் நிலையத்தில் போலீசார் இருந்தார்களா அல்லது வேறு பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்," என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad