லெனின் சிலை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதா? கொதித்தெழுந்த புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர்
புதுச்சேரி நெல்லித்தோப்பு மணிமேகலை பள்ளி அருகில், லெனின் படிப்பகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் 6 அடி உயர லெனின் சிலை நிறுவி, டிசம்பர் 23 அன்று காலை திறந்தனர்.
இதனையடுத்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் லெனின் சிலை அருகே திடீரென 3 அடி உயர விநாயகர் சிலையை வைத்து பஜனை பாடினர். இதனையறிந்து அங்கு திரண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர்களை எச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறையினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினரை மட்டும் அகற்ற முயன்றனர். கலவரத்தைத் தூண்டும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோழர்கள் வலியுறுத்தினர். ஆனால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், லெனின் சிலையை தார்ப்பாய் கொண்டு மூடியதுடன், பாஜகவினர் வைத்திருந்த விநாயகர் சிலையை அப்புறப்படுத்தினர்.
இதனையறிந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அ.மு.சலீம், லெனின் சிலையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு திரண்டிருந்த தோழர்களுடன் லெனின் சிலையின் மீது மூடப்பட்ட தார்ப்பாயை அகற்றினார். புதுச்சேரியில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலச் செயலாளர் சலீம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், லெனின் சிலைக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர்.






கருத்துகள் இல்லை