• சற்று முன்

    வேலூரில் அப்பர் அறக்கட்டளையின் ஆண்டு விழா மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா!

    வேலூர் சத்துவாச்சாரி பகுதி 2ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரி மஹால் திருமண மண்டபத்தில் அப்பர் அறக்கட்டளையின் ஆண்டு விழா மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் நன்றாக படிக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தே. நடராஜன் தலைமை வகித்தார். எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். வே. து. ரகுராமன் இறை வணக்கம் பாடினார். ஆண்டறிக்கையை வெ.ரமேஷ் குமார் சமர்ப்பித்தார். நிகழ்ச்சியை ஜி. ஆறுமுகம் தொகுத்து வழங்கினார். வரவு, செலவு அறிக்கையை ஏ.சிதம்பரம் வழங்கினார். இதில் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் ஜி.வி. செல்வம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை வழங்கி சிறப்புரையாற்றி பேசியதாவது: சமுதாயம் வளர வேண்டும் என்றால் கல்வி வளர வேண்டும். நீங்கள் சிரமப்பட்டு படிக்கிறீர்கள். படித்தால்தான் அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கையில் இரண்டு தான் முக்கியமான நாட்கள். ஒன்று பிறந்தநாள், நாம் ஏன் பிறந்தோம் என நிரூபிக்க உழைக்க வேண்டும். இந்த இரண்டு நாட்கள் தான் வாழ்க்கையில் நாம் பின்பற்றி நடக்க வேண்டியது.  குறிப்பாக நமக்கு வாழ்க்கையில் உறவுகள் முக்கியம். பிறருக்கு நாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பழக்கத்தை நாம் குழந்தை பருவத்தில் இருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்குத் தெரிந்ததை பிறருக்கு கற்றுத் தருவதை வழக்கமாக கொள்ள வேண்டும். பணம்தான் வாழ்க்கை என்பதை நினைக்காமல் பிறருக்கு உதவுவதையும் நாம் மறவாமல் செய்ய வேண்டும். நாம் எதை செய்தாலும் அதுவே நமக்கு திரும்ப வரும். இதுதான் வாழ்க்கையின் எதார்த்தம். உதவி செய்து கொண்டு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதை அனுபவித்தே தெரிந்து கொள்ள வேண்டும். சுயநல வாதிகளாக தற்போது பலர் மாறி வருகின்றனர். இதை நாளடைவில் குறைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நான், எனது குழந்தை, எனது மனைவி என்று வாழ ஆரம்பித்து விட்டனர். முட்டாள்களுக்கு சொத்து கொடுப்பதால் எந்தவித பயனும் இல்லை. அறிவாளிகளுக்கு படிப்பை கொடுங்கள். அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். இந்த கலாச்சாரத்தை மாற்றிக்கொள்ள நாம் முன்வர வேண்டும். ரூபாய் 60 லட்சம் செலவில் அப்பர் அறக்கட்டளை மூலம் இந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இங்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாம் கையொப்பம் இடுகிறோம். அந்த கையொப்பம் நாளைக்கு ஆட்டோகிராஃப் ஆக மாற வேண்டும். அந்த அளவிற்கு நாம் வாழ்க்கையில் உயர வேண்டும். வாழ்க்கையில் ஒரு படி நாம் உயர்வதற்கு நமது கையொப்பம் ஆட்டோகிராஃப்பாக மாற வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக படிக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் அதற்கு இடையே அனைவருக்கும் உதவி செய்வதை பழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் நமக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை என்றுமே வாழ்க்கையில் மறக்கக்கூடாது. படித்த பள்ளியை மறக்க கூடாது. ஆசிரியர்கள், மருத்துவர்களை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பெற்றோரையும் அதேபோன்று நாம் இறக்கும் வரை மறக்கக்கூடாது. இதைத்தான் அப்துல் கலாம் சொல்கிறார். பெற்றோர்களை இன்று நிறைய குழந்தைகள் கைவிட்டு விடுகின்றனர் என்று தெரிவித்தார். இந்த நிலை மாற வேண்டும் என நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நல்லவனாக இருப்பதை விட வல்லவனாகவும் இருக்க வேண்டும் .இதை நீங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். போட்டியை கண்டு அஞ்ச கூடாது. 2800 படிகளைக் கொண்ட திருப்பதி மலையில் முதல் படியில் ஏறும்போது என்ன உணர்வோடு தொடங்குகிறோமோ அதே போல் முடிக்கிறோம். அதேபோன்றுதான் வாழ்க்கையும் தொடங்கும்போது எப்படி ஆரம்பிக்கிறோமோ அப்படியே முடிக்க வேண்டும். எதற்கும் அஞ்சக் கூடாது, எதற்கும் பயப்படக்கூடாது. பயந்தால் வாழ முடியாது என்பதை நீங்கள் வாழ்க்கையில் தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்லி கொள்கிறேன் என்றார் ஜி.வி. செல்வம். அறக்கட்டளையின் நிறுவனர்கள் எஸ். ஆர் .எத்திராஜ் முதலியார் ,ஜி.பாபு முதலியார் ,வி.டி. சுந்தர வடிவேலு, என். கண்ணன், டி. குருநாதன் மற்றும் அறங்காவலர்கள் தே. நடராஜன் மற்றும் செயல் அறங்காவலர் வெ.ரமேஷ் குமார், பொருள் அறங்காவலர் ஜி.ஆறுமுகம் ஆகியோர் பேசினர் .இதைத் தொடர்ந்து தணிகை நாதன், கிருஷ்ணமூர்த்தி, ரகுராமன், சுப்பிரமணியம் ,சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, தணிகைவேல், சேகர், சிதம்பரம், ஜானகிராமன், வேதநாராயணன், தேவராஜ், சம்பத், லோகநாதன், அசோகன் உள்ளிட்டோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சர்வேயர் ரமேஷ் மற்றும் பிரம்மபுரம் பிரகாசம், விஐடி பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் கே. வி. குப்பத்தைச் சேர்ந்த எஸ். ராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ் ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் ரவி மற்றும் மாணவ', மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது .இறுதியாக சிதம்பரம் நன்றி கூற நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.


    செய்தியாளர் : வாசுதேவன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad